கோயம்புத்தூர்
நள்ளிரவில் ஆட்டோவில் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை
|கோவையில் நள்ளிரவில் ஆட்டோவில் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பெண் ஊழியர்
ஈரோடு மாவட்டம் கோட்டை பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண், கோவை செல்வபுரத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி உள்ளார். அவர், கடந்த 10 மாதமாக கோவையில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அந்த பெண், கடந்த 28-ந் தேதி திருப்பூருக்கு சென்றார்.
அங்கு தனது வேலை முடிந்த பிறகு பஸ்சில் புறப்பட்டு நள்ளிரவு 12.30 மணியளவில் கோவை ஹோப்காலேஜ் பஸ்நிறுத்தத்தில் வந்து இறங்கினார். அங்கிருந்து செல்வபுரம் செல்வதற்காக ஆன்லைன் மூலம் ஆட்டோவை முன்பதிவு செய்தார்.
பாலியல் தொல்லை
உடனே அவர் முன்பதிவு செய்த ஆட்டோ அங்கு வந்தது. அந்த பெண் ஏறியதும் அவினாசி ரோட்டில் ஆட்டோ சென்று கொண்டு இருந்தது. அப்போது ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சென்ற போது டிரைவர் திடீரென்று அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டார். ஆனாலும் டிரைவர், ஆட்டோவை நிறுத்தாமல் தொடர்ந்து சென்றார். இதையடுத்து பீளமேட்டில் உள்ள ஒரு வணிக வளாகம் அருகே சென்ற போது அந்த பெண் திடீரென்று ஆட்டோவில் இருந்து கீழே குதித்தார். இதில் அந்த பெண்ணுக்கு உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது.
விசாரணை
இதையடுத்து அந்த பெண் தனது நண்பர்களுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தார். உடனே அவருடைய நண்பர்கள் விரைந்து வந்து அந்த பெண்ணை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் தனியார் மருத்துவமனைக்கு சென்று அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து, சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
டிரைவர் கைது
அதில் நள்ளிரவில் ஆட்டோவில் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது கோவை உக்கடம் அருள்நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முகமது சாதிக் (வயது 43) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் முகமதுசாதிக் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நள்ளிரவில் ஆட்டோவில் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.