திருவள்ளூர்
தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி பெண் பலி
|கடம்பத்தூர் ரெயில் நிலையம் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே நேற்று மதியம் சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்பொழுது சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற திருவள்ளூர் ரெயில்வே போலீசார் உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரெயில் அடிப்பட்டு இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது போன்ற விவரங்கள் தெரியவில்லை. இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆர்.கே.பேட்டை அடுத்த வங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன் என்கிற ஜெயக்குமார் (38). இவரது மனைவி கவிதா. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஜெயக்குமார் தனது மனைவியுடன் திருத்தணி காந்தி ரோடு பகுதியில் உள்ள மாமியார் வீட்டில் வசித்து வந்தார். ஜெயக்குமார் ஜெனரேட்டர் பழுதுபார்க்கும் பணியை செய்து வந்தார். கொரோனா காலத்தில் வேலையில்லாத காரணத்தால் ஜெயக்குமார் குடும்ப செலவுக்காக கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. நிரந்தர வேலை எதுவும் கிடைக்காததால் கடன் தொல்லையால் ஜெயக்குமார் கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 17-ந் தேதி ஜெயக்குமார் பூச்சிக்கொல்லி (விஷம்) மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனைக் கண்டு அதிர்ச்சடைந்த மனைவி கவிதா உறவினர்கள் உதவியுடன் அவரை மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி ஜெயக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருத்தணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.