திருவள்ளூர்
கும்மிடிப்பூண்டி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி
|கும்மிடிப்பூண்டி அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் அருகே உள்ள கோங்கல் கிராமத்தை சேர்ந்தவர் கபிலன் (வயது 42). இவர் தனது மனைவி அமுதாவுடன் (38) நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
நாகராஜகண்டிகை அருகே செல்லும்போது, அதே திசையில் வந்த டிப்பர் லாரி ஒன்று மோட்டார் சைக்கிளின் பின்னால் மோதியதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில், லாரியின் பின்சக்கரத்தில் சிக்கிய அமுதா ரத்தவெள்ளத்தில் உயிருக்கு பேராடினார். காயம் ஏதுமின்றி உயிர் தப்பிய கணவர், அமுதாவை மீட்டுஆம்புலன்ஸ் மூலம் கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் அமுதா ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.