சென்னை
திருவொற்றியூரில் அடுக்குமாடி வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் காயம்
|திருவொற்றியூரில் அடுக்குமாடி வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் காயம் அடைந்தார்.
சென்னை திருவொற்றியூர் பாலகிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவருக்கு சொந்தமான சுமார் 50 ஆண்டுகள் பழமையான 2 மாடிகள் கொண்ட அடுக்குமாடி வீடு உள்ளது.
நேற்று மாலை இந்த வீட்டின் 2-வது மாடியில் உள்ள சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது அந்த வழியாக நடந்து சென்ற பெண் ஒருவர் மீது கட்டிட இடிபாடு விழுந்ததில் அவரது காலில் காயம் ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அந்த அடுக்குமாடி வீட்டில் யாரும் குடியிருக்காமல் பூட்டியே கிடப்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இடிந்து விழுந்த பகுதியை அந்த வார்டு கவுன்சிலர் கவி கணேசன் பார்வையிட்டு மாநகராட்சி ஊழியர்களை வைத்து இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளை அகற்ற உத்தரவிட்டார். மேலும் அந்த வழியாக வாகனங்கள் செல்லாதவாறு தெருவின் குறுக்கே தடுப்புகள் ஏற்படுத்தி உள்ளனர்.
தற்போது இந்த அடுக்குமாடி வீடு வலுவற்ற நிலையில் பலவீனமாக காணப்படுகிறது. மேலும் மாடியில் கட்டிடத்தில் விரிசலோடு ஆபத்தான நிலையில் இருக்கின்றது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
ஏற்கனவே மாநகராட்சி சார்பில் இந்த பழைமையான வீட்ைட இடிக்க வேண்டுமென நோட்டீஸ் வழங்கி உள்ளனர். ஆனால் இதுவரை இடிக்கவில்லை. எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு அந்த வீட்டை இடிக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.