சென்னை
பட்டாபிராம் அருகே குழந்தைக்கு உணவு ஊட்டி கொண்டிருந்த பெண்ணை மாடு முட்டியதால் பரபரப்பு
|பட்டாபிராமில் கைக்குழந்தையுடன் நின்ற பெண்ணை மாடு முட்டிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆவடி அடுத்த பட்டாபிராம் சோராஞ்சேரி பகுதியில் பூந்தமல்லி பார்ம்ஸ் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கின்றன. சோராஞ்சேரி கிராமத்தை சுற்றி உள்ள பொதுமக்கள் வீட்டில் வளர்க்கக்கூடிய மாடுகளை வீட்டில் பராமரிக்காமல் தெருக்களில் மேய விடுவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று பூந்தமல்லி பார்ம்ஸ் குடியிருப்பு பகுதியில் பசுமாடு ஒன்று நுழைந்தது. அப்போது பெண் ஒருவர் வீட்டு வாசலில் நின்று தனது கைக்குழந்தைக்கு உணவு ஊட்டி கொண்டிருந்தார். அங்கு வந்த பசுமாடு குழந்தையுடன் நின்ற பெண்ணை முட்டியது. சுதாரித்து கொண்ட பெண், விலகினார். ஆனால் அந்த மாடு விடாமல் அவரை முட்ட விரட்டியது.
இதனால் அந்த பெண், தனது கைக்குழந்தையுடன் அருகில் இருந்த மற்றொரு வீட்டுக்குள் ஓடி தப்பித்தார். இல்லாவிட்டால் அந்த மாடு பெண்ணையும், கையில் இருந்த குழந்தையை முட்டி தள்ளி இருக்கும். இந்த காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை திருவல்லிக்கேணியில் கடந்த 10 நாட்களில் தொடர்ந்து 3 பேரை மாடுகள் முட்டி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அரும்பாக்கத்தில் பள்ளி மாணவியும், பழவந்தாங்கலில் முதியவரையும் மாடு முட்டி இருந்தது.
அதனை தொடர்ந்து தற்போது பட்டாபிராமில் கைக்குழந்தையுடன் நின்ற பெண்ணை மாடு முட்டிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.