திருவள்ளூர்
திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனத்துக்கு காத்திருந்த மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற பெண் பிடிபட்டார்
|திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனத்துக்கு காத்திருந்த மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற பெண் பிடிபட்டார்.
சாமி தரிசனம் செய்ய...
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள அறுபடை வீடுகளில் 5-வது படை வீடாக திகழும் திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற பிற மாநிலங்களிருந்தும் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் திரளான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் உசிலங்குளம் பகுதியை சேர்ந்தவர் சிங்காரு. இவரது மனைவி வள்ளி (வயது 70). இவர் மேல்மருவத்தூர் கோவிலுக்கு செல்ல மாலை அணிந்து கொண்டு தனது கிராமத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட நபர்களுடன் திருத்தணி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார்.
கைது
முதலில் மூலவர் முருக பெருமானை தரிசனம் செய்துவிட்டு, பின்னர் உற்சவரை தரிசனம் செய்ய வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது வரிசையில் நின்ற வள்ளி அணிந்திருந்த 5 பவுன் நகையை அருகில் இருந்த பெண் ஒருவர் அறுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வள்ளி மற்றும் உறவினர்கள் அந்த பெண்ணை பிடித்து திருத்தணி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அந்த பெண் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தி (வயது 40) என்பதும், மூதாட்டியிடம் நகை பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.
திருத்தணி முருகன் கோவில் சாமி தரிசனத்திற்கு வந்த மூதாட்டியிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் மலைக்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.