விழுப்புரம்
2-வது திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிபோலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
|2-வது திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி செய்தாா்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா சிறுவை கிராமத்தை சேர்ந்தவர் மோகன்குமார் மனைவி முருவம்மாள் (வயது 28). இவர் நேற்று காலை விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு, உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த போலீசார், தடுத்து நிறுத்தி, முருவம்மாளிடம் விசாரித்தனர். அப்போது அவர் கூறுகையில், எனக்கும் எனது கணவர் மோகன்குமாருக்கும் கடந்த 4.6.2015-ல் மயிலத்தில் திருமணம் நடந்தது. எங்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் அவர், எனக்கு தெரியாமல் வேறொரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்துகொண்டு புதுச்சேரியில் குடும்பம் நடத்தி வருகிறார்.
இதுபற்றி அவரிடம் கேட்ட போது, என்னை தகாத வார்த்தையால் திட்டியதோடு 2-வது மனைவியுடன்தான் வாழ்வேன் என்றார். இதற்கு எனது மாமியாரும் உடந்தையாக இருந்து வருகிறார். எனவே எனது கணவர், மாமியார், கணவரின் 2-வது மனைவி ஆகியோரிடம் விசாரணை நடத்தி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு தனக்கு ஜீவனாம்சம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதை கேட்டறிந்த போலீசார், இதுகுறித்து விசாரணை செய்வதாகவும், இதுபோன்று தற்கொலை முயற்சியில் ஈடுபடக்கூடாது என்று அறிவுரை கூறி அவரை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.