சென்னை
விருகம்பாக்கத்தில் கொள்ளை வழக்கை விசாரிக்க வீடு மாறி சென்ற பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு அடி-உதை
|கொள்ளை வழக்கை விசாரிக்க வீடு மாறி சென்ற பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் பெண் போலீஸ் ஆகியோரை சரமாரியாக அடித்து உதைத்த 2 பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமம், குமரன் காலனியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவர், சொந்தமாக ஸ்டூடியோ நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த மாதம் இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் ரூ.2 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசார் தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த வழக்கு சம்பந்தமாக விருகம்பாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையில் போலீஸ்காரர்கள் ஜெகன், இளையராஜா மற்றும் பெண் போலீஸ் தமிழ் இலக்கியா ஆகியோர் அந்த ஸ்டூடியோவில் வேலை செய்த முன்னாள் ஊழியரான விருகம்பாக்கத்தை சேர்ந்த சுரேஷ் (37) என்பவரிடம் விசாரிக்க அவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு சென்றனர்.
அப்போது போலீஸ்காரர்கள் ஜெகன், இளையராஜா இருவரையும் போலீஸ் வாகனத்தில் அமர்ந்து இருக்கும்படி கூறிவிட்டு பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, பெண் போலீஸ் தமிழ் இலக்கியாவை உடன் அழைத்துக்கொண்டு அந்த ஊழியர் வீட்டை தேடி சென்றார். அப்போது இருவரும் போலீஸ் சீருடையில் இல்லாமல் சாதாரண உடையில் இருந்தனர்.
முகவரி சரியாக தெரியாமல் முன்னாள் ஊழியரான சுரேஷ் வீட்டுக்கு பதிலாக வேறு ஒருவரது வீட்டுக்குள் சென்றனர். அந்த வீட்டில் வசித்து வந்த பொன்னுவேல் (69), சுகுமார் (52) ஆகிய இருவரிடமும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து விசாரித்தனர். அவர்கள் இருவரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
பொன்னுவேல், சுகுமார் இருவரும் வந்திருப்பது பெண் போலீஸ் என்பது தெரியாமல், "நீங்கள் யார்?, எங்கள் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து ஏன் விசாரிக்கிறீர்கள்" என்றனர். அதற்கு அவர்கள், நாங்கள் போலீஸ் என்று கூறினர். ஆனாலும் இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த பொன்னுவேல், சுகுமார் இருவரும் சேர்ந்து பெண் இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் பெண் போலீஸ் தமிழ் இலக்கியா இருவரையும் சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் நிலை குலைந்து போன பெண் இன்ஸ்பெக்டர், போலீஸ் வாகனத்தில் அமர்ந்திருந்த போலீஸ்காரர்கள் ஜெகன், இளையராஜா இருவரையும் செல்போனில் உதவிக்கு அழைத்தார்.
உடனடியாக அவர்கள் இருவரும் அங்கு விரைந்து சென்று குடிபோதையில் இருந்த பொன்னுவேல், சுகுமார் இருவரையும் மடக்கி பிடித்து, பெண் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் பெண் போலீசை மீட்டனர். பின்னர் பிடிபட்ட இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.
இதில் லேசான காயம் அடைந்த பெண் இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் பெண் போலீஸ் தமிழ்இலக்கியா இருவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவம் குறித்து இருதரப்பினரும் கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
இதையடுத்து போலீசார் பொன்னுவேல், சுகுமார் இருவரையும் எச்சரித்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.