திருச்சி
டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் பெண் மனு
|டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் பெண் மனு அளித்தார்.
தொட்டியம் மேலத்தெருவை சேர்ந்தவர் பிச்சைரத்தினம். இவருடைய மனைவி பிரபா (வயது 32). இவர் தனது கணவர், குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் வந்து நேற்று மாலை திருச்சி கலெக்டரிடம் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், கடந்த 2012-ம் ஆண்டு நான் கலப்பு திருமணம் செய்து கொண்டேன். எனக்கு 3 குழந்தைகள் உள்ளனர். 3-வது குழந்தை பிறந்தபோது, திருச்சி அரசு மருத்துவமனையில் எனக்கு கருத்தடை சாதனம் (காப்பர்-டி) பொருத்தப்பட்டது. பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் நிரந்தர கருத்தடை செய்து கொள்ள காட்டுப்புத்தூர் அரசு சுகாதார நிலையத்துக்கு சென்றேன். அங்கு டாக்டரிடம் எனக்கு கருத்தடை சாதனம் பொருத்தப்பட்ட விஷயத்தை கூறினேன். என்னை பரிசோதித்துவிட்டு அந்த கருத்தடை சாதனம் கீழே விழுந்துவிட்டது என்று கூறி, கருத்தடை அறுவை சிகிச்சை செய்தனர். தற்போது 2 மாதமாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வருகிறேன்.
ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, எனக்கு பொருத்தப்பட்ட கருத்தடை சாதனம் சிறுநீர் பையில் சிக்கி இருந்தது தெரியவந்தது. 3 குழந்தைகளுடன் தினக்கூலியாக பிழைப்பு நடத்தி வரும் எங்களால் உரிய சிகிச்சை பெற முடியவில்லை. ஆகவே எனக்கு பாதுகாப்பான சிகிச்சை கிடைக்கவும், கவனக்குறைவாக அறுவை சிகிச்சை செய்த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும், என்று கூறியிருந்தார்.