பழனியில் பெண் ஒருவருக்கு பன்றி காய்ச்சல் உறுதி..!
|அமெரிக்காவில் இருந்து பழனி வந்த பெண் ஒருவருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பழனி,
அமெரிக்காவில் இருந்து பழனிக்கு வந்த 41 வயது பெண் ஒருவருக்கு கொரோனா காய்ச்சல் மற்றும் பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பழனி பகுதியைச் சேர்ந்த மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
அந்த பெண் கடந்த 20-ந்தேதி அமெரிக்காவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் தஞ்சாவூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அதன்பின்பு உடல்நிலை சரியில்லை என்று கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.
அப்போது அவருக்கு கொரோனா காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் பன்றி காய்ச்சல் லேசாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து 28-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து தற்போது பழனியில் உள்ள அவரது வீட்டில் ஒரு வாரத்திற்கு தனிமையில் இருக்க மாவட்ட சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். அவரது குடும்பத்தினருக்கு கொரோனா மற்றும் பன்றி காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இது எந்த வகையான பன்றி காய்ச்சல் என்று மருத்துவர்கள் சோதனை செய்து வருகின்றனர்.