கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் பெண்
|கிராமப்புற பெண்களின் கல்வி மற்றும் நவீன காலத்துக்கேற்ற வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தர டெல்லி ஐ.ஐ.டி.யில் படித்த, சென்னை பெண் சுரபி பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
'சஞ்சே சப்னே' (கனவு பகிர்வு) என்ற பெயரில் தேசிய அளவிலான தன்னார்வ அமைப்பை தொடங்கியுள்ள அவர், இந்தியா முழுவதிலும் இருக்கும் அடித்தட்டு பெண்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக பணியாற்றி வருகிறார்.
இது குறித்து சுரபி கூறுகையில், "சிறு வயதிலிருந்தே எனக்கு ஒரு விஷயத்தை பெற்றோர் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். அதாவது, கிராமப்புற மேம்பாட்டிற்கு பயன்படாத உன் கல்வியால் என்ன பயன்? என்று அவர்கள் எழுப்பிய கேள்விதான் என்னை இன்றைக்கு இந்த சேவையை கையில் எடுக்க வைத்திருக்கிறது.
என் குடும்பம் விவசாய பின்னணி கொண்டது. எங்கள் நிலத்தில் வேலை பார்த்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள்தான். அவர்கள் படிக்கவே இல்லை. அவர்களது பிள்ளைகளும் படிக்கவே இல்லை. நம்ப முடியாத அளவு கடின உழைப்பையும், உணர்ச்சிகரமான உழைப்பையும் அளித்த இந்தப் பெண்களிடம் சில எதிர்பார்ப்புகளும் இருந்தன. அவர்கள் காலம் கடந்த பிறகும் படிக்க ஆசைப்பட்டனர்.
2020-ம் ஆண்டு கொரோனா நிவாரணப் பணிகளைச் செய்தபோது, திருவண்ணாமலையில் ஒரு பெண்ணை சந்தித்தேன். அவர் படிக்க விரும்பினார். ஆனால், அவரைச் சுற்றியிருந்த மற்றவர்களுக்கு ஆர்வம் இல்லை. அப்போதுதான் சஞ்சே சப்னே என்ற அமைப்பை தொடங்கி பெண்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர தொடங்கினேன்.
கேள்வி கேட்கவும், கற்பிக்கவும் மற்றும் கற்றுக் கொள்ளவும் பெண்களுக்கு வாய்ப்பளித்தோம். சமூகத்தில் அவர்களுக்கான இடத்தை உருவாக்கவும், கல்வி மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். கிராமப்புற பெண்களாலும் சாதிக்க முடியும். அவர்களுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைக்காமல் உயர்கல்வியை வழங்க வேண்டும்" என்றார்.