சென்னை
வீட்டில் தனியாக இருந்த பெண் என்ஜினீயருக்கு பாலியல் தொல்லை - மளிகை பொருட்கள் டெலிவரி நிறுவன ஊழியர் கைது
|நீலாங்கரை அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் என்ஜினீயருக்கு பாலியல் தொல்லை அளித்த மளிகை பொருட்கள் டெலிவரி நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே வெட்டுவாங்கேணி கணேஷ்நகரை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 35). இவர், தனியார் மளிகை பொருட்கள் டெலிவரி செய்யும் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.
ஜெயபால், துரைப்பாக்கம் எம்.சி.என். நகரில் உள்ள ஒரு வீட்டில் மளிகைப்பொருட்கள் டெலிவரி செய்ய சென்றார். அந்த வீட்டில் இருந்த பெண் என்ஜினீயரிடம், பொருட் களை கொடுத்தார். அப்போது பெண் என்ஜினீயர் மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த ஜெயபால், திடீரென அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் என்ஜினீயர், கூச்சல் போட்டார். உடனே ஜெயபால், அந்த பெண்ணை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்த புகாரின்பேரில் துரைப்பாக்கம் போலீசார் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஆயுதத்தால் தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜெயபாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.