< Back
மாநில செய்திகள்
சைதாப்பேட்டையில் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கிய பெண் பலி
சென்னை
மாநில செய்திகள்

சைதாப்பேட்டையில் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கிய பெண் பலி

தினத்தந்தி
|
16 Sept 2023 7:44 AM IST

சைதாப்பேட்டையில் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கிய பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை மேற்கு மாம்பலம் ஜெயராம் பிள்ளைத் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 56). இவருடைய மகள் நிவேதா (23). இவர், வங்கி தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் பயின்று வந்தார். இவருக்கு கடந்த சில வருடங்களாக கண்ணில் குறைபாடு இருந்துள்ளது. அதற்காக சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். நேற்று முன்தினம் புத்தாடைகள் வாங்குவதற்காக தியாகராய நகர் சென்றார். பின்னர், வீடு திரும்புவதற்காக தாம்பரத்திலிருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரெயிலில் ஏறினார். தொடர்ந்து, ரெயில் சைதாப்பேட்டை ரெயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது, ரெயில் நின்று விட்டதாக நினைத்து நிவேதா கீழே இறங்க முயற்சி செய்தபோது கால் தடுமாறி கீழே விழுந்தார். இதில், ரெயிலின் சக்கரத்தில் சிக்கிய நிவேதா, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மாம்பலம் ரெயில்வே போலீசார் பலியான நிவேதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து மாம்பலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்