பாலூட்டி வளர்த்த பூனையால் பாம்பு கடிக்கு ஆளாகி உயிரிழந்த பெண்
|வளர்ப்பு பூனை கவ்வி வந்த பாம்பு கடித்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டூர் ரோடு நேரு நகரை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி சாந்தி (58 வயது). இந்த தம்பதியின் மகன் சந்தோஷ். இவர்கள் ஒரு பூனையை ஆசையாக வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பூனை சம்பவத்தன்று வீட்டு வளாகத்தில் சுற்றித்திரிந்தது. அப்போது அங்கு கட்டுவிரியன் பாம்பு ஒன்று ஊர்ந்து வந்துள்ளது.
இதை கவனித்த பூனை, அந்த பாம்பை துரத்தி துரத்தி கடித்து விளையாடியது. பின்னர் அந்த பாம்பை, வாயில் கவ்வி வீட்டில் உள்ள படுக்கை அறையில் போட்டுவிட்டு சென்றது. அந்த அறையில் சாந்தி அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தார். ஏற்கனவே பூனை கடித்த ஆத்திரத்தில் இருந்த பாம்பு அங்குமிங்கும் ஓடியது. பின்னர் தூங்கி கொண்டு இருந்த சாந்தியை கடித்தது. இதனால் திடுக்கிட்டு எழுந்த சாந்தி, பாம்பு தன்னை கடித்ததை அறிந்து அலறினார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது மகன் சந்தோஷ், உடனடியாக சாந்தியை, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சாந்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பொள்ளாச்சி நகர கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வளர்த்த பூனையே பெண்ணின் உயிருக்கு வினையான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.