திருவள்ளூர்
பெரியபாளையம் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்த வந்த பெண் பக்தர் மயங்கி விழுந்து சாவு
|பெரியபாளையம் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்த வந்த பெண் பக்தர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் புகழ்பெற்ற பவானி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 14 வாரங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவர். இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கச்சூர் கிராமம் மெயின் ரோட்டில் வசித்து வந்த காந்திமதி (வயது 58) என்ற பெண் தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் காலை இந்த கோவிலுக்கு வந்தார். பின்னர், வேப்பஞ்சேலை கட்டி நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் கோவிலை வலம் வந்தார். அப்போது அவர் மயங்கி விழுந்தார். அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் காந்திமதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காந்திமதியின் மகன் வெங்கட் கணேஷ் கொடுத்த புகாரின் பேரில் பெரியபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர். காந்திமதிக்கு சர்க்கரை நோய் இருந்ததாகவும், உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததால் நேர்த்திக்கடன் செலுத்தியபோது மயங்கி விழுந்து இறந்ததும் தெரியவந்தது.