< Back
மாநில செய்திகள்
குழந்தைகளுடன் தியேட்டருக்கு படம் பார்க்க வந்தவர் 4-வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை
சென்னை
மாநில செய்திகள்

குழந்தைகளுடன் தியேட்டருக்கு படம் பார்க்க வந்தவர் 4-வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை

தினத்தந்தி
|
29 April 2023 12:46 PM IST

சென்னை விமான நிலையத்தில் குழந்தைகளுடன் தியேட்டருக்கு படம் பார்க்க வந்த போது கார் பார்க்கிங் 4-வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னையை அடுத்த பொழிச்சலூர் கமிஷனர் காலனியை சேர்ந்தவர் பாலாஜி. இவர் அமெரிக்காவில் கோவில் ஒன்றில் சமையல் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜஸ்வர்யா (வயது 33). இவர்களுக்கு 9-ம் வகுப்பு படிக்கும் மகனும், 5-ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். ஜஸ்வர்யா குழந்தைகளுடன் சென்னையிலும் வசித்து வந்தனர். கடந்த சில மாதங்களாக ஜஸ்வர்யா மன அழுத்தம் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ஜஸ்வர்யா தனது 2 குழந்தைகளுடன் விமான நிலையத்தில் உள்ள திரையரங்கில் படம் பார்க்க வந்தார். திரையரங்கில் குழந்தைகளை அமர செய்து விட்டு கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

இதற்கிடையில் வெளியே வந்த ஜஸ்வர்யா உள்நாட்டு முனைய நடைபாதை வழியாக பன்னாட்டு முனையம் அருகே உள்ள அடுக்கு மாடி கார் பார்க்கிங் பகுதிக்கு ஒடி சென்றார். திடீரென 4-வது மாடிக்கு ஒடிச்சென்ற ஜஸ்வர்யாவை கண்ட அங்குள்ள கார் டிரைவர்கள் சத்தம் போட்டு தடுக்க முயன்றனர். அப்போது ஜஸ்வர்யா திடீரென 4-வது மாடி தடுப்பு சுவரில் ஏறி குதித்தார். கீழே விழுந்த ஜஸ்வர்யா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் விமான நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் திரையரங்கில் இருந்த குழந்தைகள் மற்றும் உறவினர்களை அழைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களாக அதிகமான மன அழுத்தத்தில் இருந்த ஜஸ்வர்யா சினிமா பார்க்க குழந்தைகளை அழைத்து திரையரங்கில் விட்டு கார் பார்க்கிங் பகுதிக்கு சென்று தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்