< Back
மாநில செய்திகள்
தள்ளாடும் கரகாட்டம்
மாநில செய்திகள்

'தள்ளாடும்' கரகாட்டம்

தினத்தந்தி
|
1 Jan 2023 10:31 AM IST

கலை... சோர்ந்து கிடக்கும் மனிதனை நிமிர்ந்து எழச்செய்யும் ஊக்க மருந்து... மனதை மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் வைத்திருக்கும் சத்து டானிக்...

கலைகளில் சிறந்தது நடனக்கலை. நடனமும், பாடலும் சேரும் போது சர்க்கரை பந்தலில் தேன்மாரி பொழிந்தது போன்று உள்ளம் குதூகலிக்கும்.

இசைக்கும், நடனத்துக்கும் மயங்காத உள்ளங்களே கிடையாது.

அதனால்தான் "இசை கேட்டால் புவி அசைந்தாடும், அது இறைவன் அருளாகும்" என்றார் கவிஞர் கண்ணதாசன்.

"மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு;

உன்ன மாலையிட தேடி வரும் நாளும் எந்த நாளு"

என்று பாடும் போது ஆடாத தலைகளும், மயங்காத மனங்களும் கிடையாது.

தமிழகத்தில் மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை, வில்லுப்பாட்டு, கரகாட்டம் என்று ஏராளமான கிராமியக்கலைகள் உள்ளன.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கிராமங்களில் பொழுதுபோக்கு என்று எதுவும் கிடையாது. நகரங்களில் நாடகம், சினிமா, பூங்கா, கடற்கரை என்று மக்கள் பொழுதை போக்க ஏராளமான வாய்ப்புகள் உண்டு. ஆனால் கிராமங்களில் எப்போதாவது பாைவக்கூத்து நடக்கும். ஏதாவது சிறிய சர்க்கஸ் கம்பெனி வந்து கொட்டகை போட்டு சர்க்கஸ் நடத்துவார்கள்.

இதுதவிர கோவில் கொடை விழாதான், ஊர் மக்களெல்லாம் ஒன்றாக கூடி சாமியை வணங்கி கொண்டாடும் முக்கிய விழாவாக இருக்கும். இந்த கொடை விழாவில் வில்லுப்பாட்டு, கணியன் கூத்து, கரகாட்டம் போன்ற கிராமியக்கலைகளும் இடம்பெறும்.

இசையும், நடனமும் கலந்ததுதான் கரகாட்டம். கிராமப்புற மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்காகவும், உற்சாகத்தின் திறவுகோலாகவும் விளங்கிய அற்புதமான கலை இது.

அலங்கரிக்கப்பட்ட பித்தளை அல்லது செம்பு குடத்தை தலையில் வைத்துக்கொண்டு நையாண்டி மேள இசைக்கு ஏற்ப, குடம் கீழே விழாதவாறு பெண்கள் மற்றும் ஆண்கள் ஆடுவதைத்தான் கரகாட்டம் என்கிறோம்.

கரகாட்டத்தின் நெருங்கிய 'தோஸ்து' நையாண்டி மேளம். நையாண்டி மேளமும், கரகாட்டமும் 'வத்தக் குழம்பும், சுட்ட அப்பளமும் போல்' ஒன்றுக்கொன்று சுவையும், பெருமையும் சேர்ப்பவை.

பாரம்பரிய கிராமிய நடனங்களில் ஒன்றான கரகாட்டம் குறித்த தகவல்கள் சங்க இலக்கியங்களில் உள்ளன. குறிப்பாக, சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய 11 ஆடல்களில் 'குடக்கூத்து' என்னும் ஒருவகை ஆடல் கரகாட்டத்தை ஒத்து இருப்பதாக தமிழ் அறிஞர்கள் கூறுகின்றனர். கரகம் பற்றி தொல்காப்பியத்திலும், புறநானூற்றிலும் குறிப்புகள் உள்ளன. மேலும் பெரியாழ்வார் திருமொழியிலும் இவ்வகை ஆடல் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

மதுரை, நெல்லை போன்ற தென் மாவட்டங்களில் கரகாட்டம் மிகவும் பிரபலம். இங்கும் புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி, சேலம் போன்ற மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்களில் கரகாட்டம் முக்கிய அம்சமாக இடம்பெறும்.

கிராமங்களில் தீபாவளி, தைப்பொங்கலை விட கோவில் திருவிழாக்களைத்தான் மக்கள் மிகுந்த ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடுவார்கள். புத்தாடை, உறவினர்கள் வருகை, விருந்து, இளவட்டங்களின் கெத்து, ஆட்டம்-பாட்டம், கொண்டாட்டம், வாணவேடிக்கை என்று ஊரே குதூகலமாக இருக்கும். பருப்பு இல்லாத சாம்பாரும், கரகாட்டம் இல்லாத கோவில் திருவிழாவும் கிடையாது.

கோவில் கொடைவிழா தேதியை முடிவு செய்ததுமே திருநெல்வேலி, மதுரை போன்ற நகரங்களுக்கு சென்று கரகாட்ட கோஷ்டியை 'புக்' செய்வதுதான் ஊர் பெருசுகளின் முக்கிய வேலை.

கோவில் விழாவின்போது, ஒளிவெள்ளத்தில் மிதக்கும் மைதானத்தில் திரண்டு இருக்கும் மக்கள் மத்தியில், கரகாட்டக்குழுவைச் சேர்ந்த பெண் கலைஞர்களும், ஆண் கலைஞர்களும் நன்றாக ஒப்பனை செய்து கொண்டு நையாண்டி மேளத்துக்கு ஏற்ப கரகாட்டம் ஆடுவார்கள். ஆண் கலைஞர்கள் 'ராஜபார்ட்' உடை அணிந்து இருப்பார்கள். பெண்களும் முழுக்கால் உடை அணிந்து இருப்பார்கள். அவர்களுடைய ஆட்டம், பார்வையாளர்களை கட்டிப்போடும். வெறும் ஆட்டம் மட்டுமின்றி நகைச்சுவையாக ஒரு கதையையும் சொல்வார்கள். அதில் அவ்வப்போது சினிமா பாடல்களும், நாட்டுப்புற பாடல்களும் இடம்பெறும்.

கரகத்துடன் கண்ணாடி பாட்டிலில் நிற்பது, விளக்கு ஏந்துவது, கண் இமை மூலம் பிளேடை எடுப்பது, தேங்காய் உடைப்பது, தீப்பந்தம் சுற்றுவது, சிலம்பம் சுற்றுவது என கரகாட்ட கலைஞர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை செய்து காட்டுவார்கள். பபூனாக வரும் நகைச்சுவை கலைஞர் அவ்வப்போது சில சாகசங்களையும், சேஷ்டைகளையும் செய்து கூட்டத்தை சிரிக்க வைப்பார். இரவு 10 மணிக்கு களைகட்ட தொடங்கும் கரகாட்டம் நாதஸ்வர மேள இசை, ஆட்டம்-பாட்டம், கேலி-கிண்டல், நக்கல்-நையாண்டி என்று அதிகாலை வரை நீடிக்கும்.

ஆண்கள்-பெண்கள், சிறியவர்கள்-பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் அமர்ந்து பார்த்து ரசிப்பார்கள். அவ்வப்போது கை தட்டியும், விசில் அடித்தும் கரகாட்ட கலைஞர்களை உற்சாகப்படுத்துவார்கள். இளைஞர்கள், 'மைனர் குஞ்சு'கள் மட்டுமின்றி பல் போன கிழவர்கள்கூட ஊக்கு மூலம் பத்து, ஐம்பது, நூறு என்று ரூபாய் நோட்டுகளை கரகாட்டம் ஆடும் பெண்களின் ஜாக்கெட்டில் குத்தி புளகாங்கிதம் அடைவார்கள்.

இப்படி இரண்டு, மூன்று நாட்கள் ஊரே அமர்க்களப்படும்.

கிட்டத்தட்ட 20-ம் நூற்றாண்டின் இறுதி வரை இப்படி அனைத்து தரப்பினரும் விரும்பி ரசித்துப்பார்த்த கரகாட்டத்தின் தன்மை காலப்போக்கில் மெல்ல மெல்ல மாறத்தொடங்கியது. முழுக்கால் உடை அணிந்து ஆடிய கலைஞர்கள் அரைக்கால் டிரவுசர் போன்ற மிகவும் குட்டையான உடையை அணிந்து ஆடத்தொடங்கினார்கள். நாளாக நாளாக ஆடை குறைந்து கவர்ச்சி அதிகரித்தது.

நிகழ்ச்சியின் போது கரகாட்ட கலைஞர்கள் சில சமயங்களில் பேசும் ஆபாசமான வசனங்கள்-உடல் மொழிகள் பார்வையாளர்களை முகம் சுழிக்க வைத்தது. இளவட்டங்கள் அதை ரசித்தாலும், மற்றவர்கள் குறிப்பாக பெண்கள் கூச்சப்பட்டார்கள். இதனால் அவர்கள் கரகாட்டம் பார்க்க வருவது வெகுவாக குறைந்தது.

கரகாட்டங்களில் இதுபோன்ற ஆபாசங்கள் அதிகரித்தது, நாளடைவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் சில இடங்களில் கரகாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

கோவில் திருவிழாவையொட்டி, கரகாட்டம் நடத்த அனுமதி கோரி கடந்த நவம்பர் மாதம் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, கரகாட்டம் நடத்த சில நிபந்தனைகளோடு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

"கலைஞர்கள் ஆபாச உடை அணியாமல், நாகரிகமான உடைகளை உடுத்தி ஆபாச வார்த்தைகளோ-பாடல்களோ-நடனமோ இல்லாமல் கரகாட்ட நிகழ்ச்சியை நடத்திக்கொள்ளலாம்; இரட்டை அர்த்தம் கொண்ட பாடல்களை பாடுவதோ, இசைப்பதோ கூடாது" என்பன போன்ற சில நிபந்தனைகளை அப்போது நீதிபதி விதித்தார். அத்துடன் நிபந்தனைகளை மீறினால் போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உத்தரவிட்டார்.

பொதுவாக அரங்கங்களில் ஆடும் கலைஞர்களுக்கு கிடைப்பது போன்ற மரியாதையும், அந்தஸ்தும் வீதிகளில் ஆடும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு கிடைப்பது இல்லை.

கரகாட்டத்துக்கு இப்போதெல்லாம் உரிய மரியாதை இல்லை என்றும், அது பாரம்பரிய கலையாக இல்லாமல் பொருளாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மாறிவிட்டது என்றும் மூத்த கலைஞர்கள் சிலர் வேதனையுடன் கூறுகின்றனர். மேலும் வயது குறைந்த பெண்களையே நிகழ்ச்சிக்கு அழைப்பதாகவும், திறமைக்கு மரியாதை இல்லாமல் போய்விட்டதாகவும் அவர்கள் வருத்தப்படுகிறார்கள்.

டி.வி., சினிமாக்களில் வருவது போன்று இருக்கவேண்டும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விரும்புவதால்தான் தாங்கள் 'அப்படி' ஆடுவதாக கரகாட்ட கலைஞர்கள் கூறுகிறார்கள். ஆனால் எதிர்தரப்போ, காலத்துக்கு ஏற்ப கலைஞர்களே தங்களை மாற்றிக்கொண்டார்கள் என்கிறது.

"அவர்கள் ஆடுவதால் நாங்கள் அப்படி கேட்கிறோம்" என்கிறது ஒரு தரப்பு; "அவர்கள் கேட்பதால் நாங்கள் அப்படி ஆடுகிறோம்" என்கிறது மற்றொரு தரப்பு. இது, முதலில் முட்டையில் இருந்து கோழி வந்ததா? இல்லை கோழியில் இருந்து முட்டை வந்ததா? என்ற விவகாரம் போல் உள்ளது.

மொத்தத்தில், ஆபாசம் அதிகரித்ததன் காரணமாக கரகாட்டத்துக்கான வரவேற்பு சமீப காலமாக குறைந்து வருவதாக பரவலான கருத்து உள்ளது. மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மீதுள்ள ஈடுபாட்டின் காரணமாக, பெண்களுக்கு கரகாட்டத்தின் மீதான ஆர்வம் குறைந்துவிட்டது என்பதையும் மறுப்பதற்கில்லை.

இதனால் வருமானம் குறைந்து கரகாட்ட கலைஞர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு இருப்பதாக அந்த துறையில் உள்ள மூத்த கலைஞர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். ஆனால் இளம் கலைஞர்கள் சிலர் "அப்படியெல்லாம் இல்லை" என்கிறார்கள். எது எப்படி இருந்தாலும், நாட்டுப்புற கலையான கரகாட்டத்தை அடுத்தடுத்து வரும் தலைமுறையினரிடமும் நாம் கொண்டு சேர்க்க வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பொறுப்பு உள்ளது.

கிராமப்புற மக்களின் வாழ்வியலோடு இணைந்த கரகாட்டத்துக்கு பழைய மவுசும், வரவேற்பும் கிடைக்க வேண்டும். பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களையும் கரகாட்ட கலைஞர்கள் மகிழ்விக்க வேண்டும்; அவர்களுடைய வாழ்விலும் வசந்தம் வீச வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமும் ஆகும்.

மீனாட்சிஅம்மனும், கிளியும்...



கரகத்தின் மேல் பகுதியில் வைக்கப்படும் கிளியின் உருவம், மதுரை மீனாட்சி அம்மன் கையில் உள்ள கிளியை நினைவுபடுத்துவதால், கரகக்கலையின் பூர்வீகம் மதுரையாகத்தான் இருக்க முடியும் என்கிறார்கள் மூத்த கலைஞர்கள்.

காரணம், எந்த ஊரில் உள்ள ஆட்டக்காரர்களை கேட்டாலும், மதுரையில் உள்ள வாத்தியார் கற்றுக்கொடுத்ததாகத்தான் கூறுவார்கள். அந்த வகையில் வாத்தியார்கள் நிறைந்த ஊராக மதுரை இருந்தது; தற்போதும் இருக்கிறது.

தமிழகத்தின் வட மாவட்டங்களில் தெருகூத்தும், தஞ்சை மாவட்டத்தில் பொய்க்கால்குதிரையும் மிகவும் பிரபலம். இதேபோல் நெல்லை மாவட்டம் நையாண்டி மேளம் மற்றும் வில்லுப்பாட்டுக்கு சிறப்பு பெற்றது. தேனி மாவட்டத்தில் தேவராட்டம் பிரபலம். மதுரை கரகாட்டத்தின் பிறப்பிடமாக விளங்குகிறது.

கரகம் ஆடிய குஷ்பு


* கரகாட்ட கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன்-கனகா நடிப்பில் உருவான அற்புதமான பொழுதுபோக்கு படம்தான் 'கரகாட்டக்காரன்'. 1989-ல் வெளியாகி சக்கைபோடு போட்ட இந்த படத்துக்கு இளையராஜாவின் இசையும், பாடல்களும், நாதஸ்வர கோஷ்டியாக வரும் கவுண்டமணி-செந்தில் ஜோடி அடிக்கும் லூட்டிகளும் பக்கபலமாக அமைந்தன.

* சிவகுமார், செல்வா, குஷ்பு நடிப்பில் 1996-ல் வெளியான 'நாட்டுப்புற பாட்டு' படத்தில் இடம்பெற்ற 'ஒத்த ரூபாயும் தாரேன்' பாடலில் குஷ்பு அழகாக கரகம் ஆடி இருப்பார்.

* சிவாஜி கணேசன், முரளி, ராதிகா, ரோஜா நடிப்பில் 1998-ல் வெளிவந்த 'என் ஆைச ராசாவே' படமும் கரகாட்ட கலைஞர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டதுதான். இந்த படத்தில் சிவாஜிகணேசனும் கரகாட்ட கலைஞராக நடித்து இருந்தார்.

* 1964-ல் வெளியான 'தாயின் மடியில்' படத்தில், 'ராஜாத்தி பூத்திருந்தா' என்ற பாடலில் எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் பொய்க்கால் குதிரை ஆடியிருப்பார்கள்.

* 2016-ல் பாலா இயக்கத்தில் வெளியான 'தாரை தப்பட்டை' படத்தில் வரலட்சுமி சரத்குமார் நாட்டுப்புற நடன கலைஞராக நடித் திருப்பார்.

கரகம் செய்வது எப்படி?


சிறந்த பொழுதுபோக்கு கலையான கரகாட்டத்தில் பயன்படுத்தப்படும் கரகம் தெய்வீக அம்சம் பொருந்தியது. அதை செய்வதில் சில பிரத்யேக நடைமுறைகள் உள்ளன. 3 அல்லது 4 கிலோ எடையுள்ள செம்புக்குள் அரிசியை நிரப்பி ஒரு ரூபாய் நாணயத்தை இட்டு கரகம் செய்யப்படுகிறது. கரகத்தின் வாய் போன்ற மேல் பகுதியை தேங்காயால் மூடி பின்னர் அதன் மீது 'டோப்பா' எனப்படும் சிறிய குடையை பொருத்தி அதில் தக்கையால் செய்யப்பட்ட கிளி, அன்னம், புறா ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை சொருகி வைப்பார்கள்.

தானிய உற்பத்திக்கு அடிப்படையாக விளங்கும் விதைப்பாதுகாப்புக்கும் இந்த கரகம் உதவியாக இருந்து வந்திருக்கிறது. அதாவது கரகத்துக்குள் விதைகளை போட்டு வைத்து வழிபட்டு பின்னர் அதை முளைப்பாரி எனப்படும் விதைத்தேர்வுக்கு பயன்படுத்தும் முறை இருந்து வந்திருக்கிறது.

தெய்வ வழிபாட்டுக்கு ஆடும் கரகம் 'சக்தி கரகம்' என்றும், தொழில்முறையாக ஆடும் கரகத்தை 'ஆட்டக் கரகம்' என்றும் சொல்வார்கள்.

"காப்பாற்ற வேண்டும்"


மதுரையைச் சேர்ந்த கலைமாமணி விருது பெற்ற கோவிந்தராஜ், அழிந்து வரும் கரகாட்ட கலையை காப்பாற்ற வேண்டும் என்கிறார்.

அவர் கூறியதாவது:-

20 ஆண்டுகளாக கரக கலையில் இருக்கிறேன். பள்ளியில் படிக்கும்போது, கலை பண்பாட்டு துறை சார்பில் நடந்த பயிற்சி வகுப்பில் மரக்கால் ஆட்டத்தை கற்பதற்காக சென்றேன். பின்னர் என்னை கரகாட்டத்தில் ஈடுபடுத்திக்கொண்டேன். கரகத்தை தலையில் வைத்து மரக்கால் ஆட்டத்தையும் பல வகைகளில் செய்து வருகிறேன். என்னுடைய வாத்தியார் கொடுத்த கரகத்தைத்தான் 3-வது தலைமுறையாக இப்போது வரை பயன்படுத்துகிறேன். கலைக்கு எல்லை இல்லை என்பதால், இன்னும் நான் கற்றுக்கொண்டேதான் இருக் கிறேன்.

எங்கள் குழுவில் கிட்டத்தட்ட 200 கலைஞர்கள் உள்ளனர். நாங்கள் எந்த வித ஆபாசமும் இல்லாமல்தான் கரகம் ஆடுகிறோம். ஆபாச வார்த்தைகளுக்கும் இடமில்லை. பெண்கள் சேலை அணிந்துதான் ஆடுகிறார்கள். எங்கள் குழுவில், கரகம் ஆடும் ஆண், பெண் கலைஞர்கள் கல்லூரியில் படித்து வருகிறார்கள்.

பரதநாட்டியத்துக்கு இணையானது கரகாட்டம். ஆனால், அதற்கு இருக்கும் மதிப்பும், மரியாதையும் கரகாட்டத்துக்கு இல்லாதது வேதனையாக இருக்கிறது. கரகாட்டத்தை அழித்ததில் பாதி பங்கு எங்கள் சக கலைஞர்களையே சாரும். கலைத்துறையில் இருப்பவர்களே கலையை அழிக்க முயற்சிக்கிறார்கள்.

கரகாட்டத்துக்கு மதிப்பு குறைந்து வருவதாலும், மரியாதை முக்கியம் என்பதாலும் மூத்த மற்றும் கலைமாமணி விருது பெற்ற பெண் கலைஞர்கள் இப்போது கரகம் எடுத்து ஆட மறுக்கிறார்கள். இதனால் கரகாட்டம் அழிந்து வருகிறது. ஆன்மிகத்துக்கு ஆடும் கரக கலைஞர்கள், இறப்பு வீட்டில் ஆடமாட்டார்கள். ஆனால், அந்த பழக்கமும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து இப்போது, பணத்திற்காக எல்லா இடங்களிலும் கரகம் ஆட ஆரம்பித்து விட்டார்கள். நெறிமுறையோடு, ஒழுக்கத்தோடு இந்த கலையை காப்பாற்ற எல்லா கலைஞர்களும் முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

"ஆபாசமாக பேசினால் முன்னுரிமை"




மூத்த கரகாட்ட கலைஞர் முருகேஷ்வரி கூறியதாவது:-

என்னுடைய 13 வயதில் இருந்து கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக கரகம் ஆடுகிறேன். முதலில் ஆண்களே அதிகமாக கரகம் ஆடி வந்தனர். தற்போது, பெண்கள் மிகுதியாக பங்கேற்று ஆடுகின்றனர்.

பல்வேறு விதமான அடவுகளை ஆடுவது மட்டுமல்லாமல், கரகத்தை தலையில் சுமந்தபடி கண்களை துணியால் கட்டிக்கொண்டு நீண்ட கத்தியால், மற்றொருவர் மார்பில் வைக்கப்பட்ட வாழைக்காயை வெட்டுதல், தேங்காய் உடைத்தல், கண் இமைகளை மூடிக்கொண்டு ஊசிநூல் கோர்த்தல் போன்ற சிறுசிறு சாகச வேலைகளையும் செய்து காட்டுவோம். ஆனால், இப்போதுள்ளவர்களுக்கு சாகச வேலைகள் தெரியாது. எனது தனித்திறமையால் மட்டுமே இந்த துறையில் இத்தனை ஆண்டுகள் நீடிக்க முடிந்தது.

கரகாட்டம் ஆடுபவர்கள் முகத்துக்கு நன்கு ஒப்பனை செய்து கொள்கின்றனர். பெண்கள் உடலோடு ஒட்டிய பளபளப்பான ஆடைகளை அணிகின்றனர். பரத நாட்டிய கலைஞர்களைப் போல் காலில் சலங்கை அணிந்து ஆடுகின்றனர். இந்த ஆட்டத்தில் புதுப்புது யுக்திகளை பயன்படுத்தி ஆடி வருகின்றனர். கரகம் ஆடுபவர் எப்படி உடலை வளைத்து ஆடினாலும், கரகம் கீழே விழாது. முன்பெல்லாம் உடையில் எந்தவித ஆபாசமும் இருக்காது. ஆனால், இப்போது ஆபாசம் இல்லாமல் இல்லை.

என்னுடைய குடும்பத்தில் உள்ள 3 சகோதரிகளும் கரகாட்ட கலையில் சிறப்பானவர்கள். அவர்களும் ஆபாசமாக ஆடியது கிடையாது. எல்லா இடங்களிலும் குடும்ப உறுப்பினர்களைப் போல்தான் எங்களை நடத்தினார்கள். ஒரே ஊரில் தொடர்ந்து 25 வருடங்களாக நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கி றோம்.

அரசு சார்பில் பலமுறை வெளிநாடுகளுக்கு சென்று கரகம் ஆடி இருக்கிறேன். வெளி மாநிலங்களிலும் கரகம் ஆடி இருக்கிறோம். எந்த இடத்திலும் பணத்துக்கு ஆசைப்படவில்லை. விடிய விடிய கரகாட்டம் ஆடினால் 75 ரூபாய் சம்பளம் கொடுப்பார்கள். ஆனால், இப்போது ஆபாசமாக பேசுபவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, அதிக சம்பளம் வழங்குகிறார்கள்.

மூத்த கலைஞர்களுக்கு அரசு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

"வெளி மாநிலங்களுக்கு செல்வதில்லை"



மதுரை திருமங்கலத்தை சேர்ந்த கரகாட்ட கலைஞர் பரமேஸ்வரி (வயது 28) கூறுகையில், ''நான் கடந்த 7 ஆண்டுகளாக கரகம் ஆடி வருகிறேன். எனது தாய் பாண்டியம்மாள் கரகாட்ட கலைஞர் ஆவார். எங்களுக்கு பிடித்த தொழில் என்பதால், பரம்பரை, பரம்பரையாக கரகம் ஆடி வருகிறோம். பெரும்பாலும் திருவிழாக்களுக்கு கரகம் ஆட செல்வோம். இந்த தொழிலில் போதுமான வருமானம் உள்ளது. விழாக்கள் இல்லாத சமயங்களில் ஏற்கனவே கிடைத்த வருமானம் மூலம் வாழ்க்கையை நடத்துவோம். வேறு வேலைக்கு செல்வது கிடையாது. இரட்டை அர்த்தம் கலந்த ஆபாச பேச்சுகள் கூடாது. ஆபாசமாக ஆடக்கூடாது என சமீபத்தில் ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. அதன்படிதான் நாங்கள் கரகம் ஆடுகிறோம். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று ஆடியுள்ளோம். வெளிமாநிலங்களுக்கு அழைத்தபோது நாங்கள் செல்லவில்லை'' என்றார்.

மேலும் செய்திகள்