வீட்டில் தூங்கி கொண்டிருந்த தொழிலாளியை மிதித்து கொன்ற காட்டு யானை
|கனகராஜ் தூங்கி கொண்டிருந்த குடிசையை காட்டு யானை சூறையாடியது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொப்பம்பாளையம் அருகே வனப்பகுதியில் உள்ளது மணல்மேடு. இங்குள்ள தூரம் மொக்கை பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (வயது 44). இவர் மனைவியை பிரிந்து தூரன் மொக்கை பகுதியில் வசித்து வந்தார். தொழிலாளியான கனகராஜ் அந்த பகுதியில் மீன் பிடித்து வந்ததுடன், ஆடுகளும் மேய்த்தார்.
அருகில் உள்ள மற்றொரு குடிசையில் அவருடைய தந்தை கருப்புசாமி, தாய் குழந்தை அம்மாள் ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் தன்னுடைய குடிசையில் கனகராஜும் அருகே உள்ள குடிசையில் அவருடைய பெற்றோரும் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு 1 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை தூரம் மொக்கை பகுதிக்கு வந்தது. பின்னர் கனகராஜ் தூங்கி கொண்டிருந்த குடிசையை சூறையாடியது.
சத்தம் கேட்டு அங்கு தூங்கி கொண்டிருந்த கனகராஜ் திடுக்கிட்டு எழுந்தார். அப்போது யானை நின்று கொண்டிருந்தது. சற்றும் எதிர்பாராத வகையில் யானை அவரை காலால் மிதித்தது. பின்னர் அங்கிருந்து யானை சென்றுவிட்டது. இதில் கனகராஜின் தலை மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
வலி தாங்க முடியாமல் அவர் அலறினார். சத்தம் கேட்டு அருகே தூங்கி கொண்டிருந்த அவருடைய பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் கனகராஜை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கனகராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பவானிசாகர் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.