நீலகிரி
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சேதப்படுத்திய காட்டு யானை
|கூடலூர் அருகே பார்வுட் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை உடைத்து மருந்துகள் மற்றும் உபகரணங்களை காட்டு யானை சேதப்படுத்தியது
கூடலூர் பகுதிகளில் அவ்வப்போது காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் வந்து வீடுகளை உடைப்பது, விவசாய பயிர்களை சேதப்படுத்துவதும் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்பட்டு வருகிறது இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
இந்த நிலையில் கூடலுரை அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட பார்வுட் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அந்த பகுதியில் கர்ப்பிணிகள் மற்றும் விபத்துக்கு உள்ளாகும் நபர்களுக்கு உடனடி முதலுதவி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை அந்த பகுதிக்கு வந்த யானை கூட்டத்தில் இருந்த ஒரு யானை மருத்துவமனையின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று நிலையில் அங்கு இருந்த மருந்துக்கிடங்கை உடைத்து மருந்து பொருட்கள் முழுவதையும் தூக்கி வீசி சேதப்படுத்தியதோடு அங்கிருந்து உபகரணங்களையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியது. பின்பு நோயாளிகளுக்கான சிகிச்சை படுக்கையையும் அடித்து நொறுக்கிய அந்த யானை மருத்துவமனை முழுவதும் துவம்சம் செய்தது.
காட்டு யானை மருத்துவமனையை சேதப்படுத்திய சம்பவம் அந்த பகுதி பொது மக்களிடையே பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.