< Back
மாநில செய்திகள்
வன ஊழியர்களை காட்டு யானை துரத்தியதால் பரபரப்பு
நீலகிரி
மாநில செய்திகள்

வன ஊழியர்களை காட்டு யானை துரத்தியதால் பரபரப்பு

தினத்தந்தி
|
8 Oct 2023 1:30 AM IST

மசினகுடி-ஊட்டி சாலையில் முகாமிட்ட காட்டு யானையை விரட்டும் போது, வன ஊழியர்களை யானை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மசினகுடி-ஊட்டி சாலையில் முகாமிட்ட காட்டு யானையை விரட்டும் போது, வன ஊழியர்களை யானை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காட்டு யானை

நீலகிரி மாவட்டம் முதுமலையில் இருந்து மசினகுடி, கல்லட்டி மலைப்பாதை வழியாக ஊட்டிக்கு சாலை செல்கிறது. முதுமலை, மசினகுடியில் அடர்ந்த வனப்பகுதி உள்ளதால், காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் சாலையை கடந்து செல்வது வழக்கம். குறிப்பாக சீகூர் பாலம் பகுதியில் ஆறு இருப்பதால் யானை, கரடி, புலி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் அப்பகுதியில் நடமாடி வருகின்றன.

தற்போது காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால், வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் சீகூர் பாலம் பகுதியில் காட்டு யானை வந்தது. பின்னர் நீண்ட நேரமாக அப்பகுதியில் முகாமிட்டது. இதனால் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டனர்.

வன ஊழியர்களை துரத்தியது

அப்போது வனப்பகுதியில் இருந்து சாலையை கடந்த காட்டு யானை வனத்துறையினரை துரத்தியபடி ஆக்ரோஷமாக ஓடி வந்தது. இதனால் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் காட்டு யானை சாலையை கடந்து செல்லாமல் அப்பகுதியில் தொடர்ந்து முகாமிட்டது. இதனால் மசினகுடி-ஊட்டி சாலையில் ½ மணி நேரத்திற்கும் மேலாக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து யானை வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னர் வாகன போக்குவரத்து சீரானது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஆற்றில் தண்ணீர் அருந்துவதற்காக வனவிலங்குகள் சாலையை அடிக்கடி கடந்து செல்கின்றன. இதனால் வாகனங்களை அதி வேகமாக இயக்கக்கூடாது. மேலும் வனவிலங்குகள் நடந்து செல்வதை கண்டால், சற்று தொலைவில் வாகனங்களை நிறுத்த வேண்டும். அவை சாலையை கடந்து சென்ற பின்னர் வாகனங்களை இயக்கலாம். வனவிலங்குகளுக்கு எந்தவித தொந்தரவும் அளிக்கக்கூடாது என்றனர்.

மேலும் செய்திகள்