ஈரோடு
பண்ணாரி சோதனைச்சாவடி அருகே காய்கறி வேனை துரத்திய காட்டு யானை
|பண்ணாரி சோதனைச்சாவடி அருகே காய்கறி வேனை துரத்திய காட்டு யானை
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு ஏராளமான யானைகள், சிறுத்தைகள், காட்டெருமை, மான்கள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் காணப்படுகின்றன. இதில் இரவு நேரத்தில் காட்டைவிட்டு வெளியேறும் யானைகள் பண்ணாரி சோதனைச்சாவடி அருகே கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரி மற்றும் வாகனங்களை தடுத்து நிறுத்துகின்றன.
அதேபோல் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை பண்ணாரி சோதனைச்சாவடி அருகே சுற்றி திரிந்தது. அப்போது அந்த வழியாக கர்நாடகாவுக்கு காய்கறிகளை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வேனை பார்த்ததும் யானை அதனை துரத்தி சென்றது. பின்னர் வேனின் பின்னால் கட்டப்பட்டிருந்த கயிற்றை துதிக்கையால் இழுக்க முயன்றது. மேலும் மூட்டைகளையும் இழுத்து காய்கறியை தின்க முயற்சித்தது. ஆனால் சுதாரித்துக்கொண்ட வேன் டிரைவர் வாகனத்தை வேகமாக ஓட்டி சென்றுவிட்டார். இதனால் யானைக்கு எதுவும் சிக்கவில்லை. ஏமாற்றத்துடன் அங்கிருந்து சென்றுவிட்டது.