ஈரோடு
ஆசனூர் அருகே அரசு பஸ்சை வழிமறித்து கரும்பை தேடிய காட்டு யானை
|ஆசனூர் அருகே அரசு பஸ்சை வழிமறித்து அதில் கரும்பு இருக்கிறதா என காட்டு யானை தேடியது.
தாளவாடி
ஆசனூர் அருகே அரசு பஸ்சை வழிமறித்து அதில் கரும்பு இருக்கிறதா என காட்டு யானை தேடியது.
40 பயணிகள்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் காணப்படுகின்றன. மேலும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் வழியாக திண்டுக்கல்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையும் உள்ளது. வனப்பகுதியில் இருந்து ெவளியேறும் காட்டு யானைகள் அடிக்கடி இந்த தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வது வழக்கம்.
குறிப்பாக இந்த நெடுஞ்சாலை வழியாக செல்லும் லாரிகளை வழிமறித்து அதில் உள்ள கரும்புகளை பிடுங்கி தின்பது தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடிக்கு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
வழிமறித்த காட்டு யானை
இதனிடையே ஆசனூர் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று கரும்பு லாரி வருகிறதா என ரோட்டில் நின்று கொண்டிருந்தது. ஆனால் கரும்பு லாரிகள் எதுவும் வராததால் அந்த வழியாக வந்த அரசு பஸ்சை வழிமறித்தது. பின்னர் அந்த பஸ்சின் முன்பக்க கண்ணாடியை தனது துதிக்கையால் தொட்டு பார்த்து கரும்பு இருக்கிறதா? என தேடியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அச்சத்தால் கூச்சலிட்டனர். பஸ்சை யானை வழிமறித்ததால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 15 நிமிடத்துக்கு பின்னர் யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் பெருமூச்சு விட்டனர்.