கோயம்புத்தூர்
வீட்டை உடைத்து தண்ணீர் குடித்த காட்டு யானை
|வால்பாறை அருகே வீட்டை உடைத்து தண்ணீர் குடித்த காட்டு யானையால் தொழிலாளாகள் அச்சம் அடைந்தனர்.
வால்பாறை சுற்று வட்டார பகுதியில் உள்ள பல்வேறு எஸ்டேட்டுகளில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக முகாமிட்டு சுற்றித்திரிந்து தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வீடுகளையும் ரேஷன் கடைகளையும் உடைத்து சேதப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் வால்பாறை பகுதி முழுவதும் பல்வேறு எஸ்டேட்டுகளில் ஒற்றை யானை கடந்த இரண்டு மாதங்களாக சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வீடுகளில் உள்ள தோட்டங்களுக்குள் நுழைந்து பலாமரங்களை உடைத்து சாப்பிடுவதும், கொய்யா மரங்களை உடைத்து கொய்யா பழங்களை சாப்பிடுவதும் வாடிக்கையான ஒன்றாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை பட்டப்பகலில் புதுத்தோட்டம் எஸ்டேட் 10 ஏக்கர் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள வனப் பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றை யானை குடியிருப்பு பகுதியில் இருந்த கொய்யா மரங்களை உடைத்து கொய்யா பழங்களை சாப்பிட்டு விட்டு நீண்ட நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்தது.
பின்னர் அருகில் இருந்த ஜோதிராமன் என்ற தொழிலாளியின் வீட்டின் பின் பக்க அறையை உடைத்து உள்ளே பாத்திரத்தில் வைத்திருந்த தண்ணீர் முழுவதையும் குடித்துக் கொண்டிருந்தது. தொழிலாளர்கள் வனத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் வந்து கூச்சலிட்டு தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த யானையை அங்கிருந்து வனப் பகுதிக்குள் விரட்டி விட்டனர். அப்போது தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த யானை பாத்திரத்தையும் தூக்கிக் கொண்டு வனப் பகுதிக்குள் சென்று வீசியெறிந்து விட்டு சென்றது.
பட்டப்பகலில் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புக்குள் நுழைந்து வீட்டை உடைத்து தண்ணீர் குடித்த சம்பவம் புதுத்தோட்டம் பகுதியில் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வால்பாறை வனச்சரக மனித வனவிலங்கு மோதல் தடுப்பு வேட்டை தடுப்பு காவலர்கள் புதுத்தோட்டம் பகுதியில் முகாமிட்டு ஒற்றை யானை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். யானை தொடர்ந்து அதே பகுதியில் முகாமிட்டு நின்று வருவதால் எஸ்டேட் பகுதி மக்கள் கவனமாக இருக்க வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.