கோயம்புத்தூர்
குடியிருப்பை முற்றுகையிட்ட காட்டு யானை
|வால்பாறையில் குடியிருப்பை முற்றுகையிட்ட காட்டு யானையால் தோட்டத் தொழிலாளர்கள் பீதி அடைந்து உள்ளார்கள்.
வால்பாறை பகுதியில் காட்டு யானைகள் பல்வேறு எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு சுற்றித்திரிந்து வருகிறது. இந்த யானைகள் சிறு சிறு கூட்டமாக பிரிந்து எஸ்டேட் பகுதிகளில் முகாமிட்டுள்ளது. இந்த யானைகள் கூட்டத்தை சேர்ந்த ஆண் காட்டு யானை மட்டும் பட்டப்பகலிலும் அதிகாலை நேரத்திலும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் நடமாடி வருகிறது. இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியை விட்டு வெளியே வருவதற்கு அச்சப்படுகின்றனர்.
இந்த நிலையில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் நுழைந்த காட்டு யானை குடியிருப்பை முற்றுகையிட்டதோடு அங்கிருந்த கொய்யா மரங்களை முறித்து கொய்யா பழங்களை பறித்து தின்றது.
தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து கூச்சலிட்டு யானையை குடியிருப்பு பகுதியில் இருந்து விரட்டி விட்டனர். ஆனாலும் ஒற்றை யானை குடியிருப்பு பகுதியில் தொழிலாளர்களின் வீட்டு தோட்டத்தில் இருந்த பலா மரம், கொய்யா மரங்களில் இருந்த பழங்களை பறித்து தின்று அட்டகாசம் செய்தது. இதனால் தோட்டத் தொழிலாளர்கள் பீதி அடைந்து உள்ளார்கள்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ஒற்றை யானை குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து முற்றுகையிட்டு அட்டகாசம் செய்து வருகிறது. அதனால் தொழிலாளர்கள், பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மேலும் இரவு நேரங்களில் தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும். என்றனர்.