ஈரோடு
பண்ணாரி சோதனைச்சாவடி அருகே ரோட்டில் வீசப்பட்ட பிளாஸ்டிக் பைகளை தின்ற காட்டு யானை
|பண்ணாரி சோதனைச்சாவடி அருகே ரோட்டில் வீசப்பட்ட பிளாஸ்டிக் பைகளை காட்டு யானை தின்றது.
சத்தியமங்கலம்
பண்ணாரி சோதனைச்சாவடி அருகே ரோட்டில் வீசப்பட்ட பிளாஸ்டிக் பைகளை காட்டு யானை தின்றது.
காட்டு யானைகள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், தலமலை, கேர்மாளம், டி.என்.பாளையம் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு ஏராளமான யானைகள், மான்கள், காட்டெருமைகள், கரடிகள், புலிகள், சிறுத்தைப்புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.
சில நேரங்களில் யானைகள் காட்டில் இருந்து வெளியேறி திம்பம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வந்து நிற்கும். அப்போது அந்த வழியாக வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி அதில் கரும்பு இருக்கிறதா? என தேடி பார்க்கும். அதில் கரும்புகள் இருந்தால் அவற்றை தின்றுவிட்டு காட்டுக்குள் சென்றுவிடும். இது தொடர் கதையாக நடந்து வருகிறது.
பிளாஸ்டிக் பைகளை தின்றது
இந்த நிலையில் நேற்று காலை வனப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று வெளியேறியது. பின்னர் அந்த யானை பண்ணாரி சோதனைச்சாவடி அருகே உள்ள ரோட்டில் வந்து நின்றது. அப்போது அந்த வழியாக கரும்புகள் ஏற்றி ஏதும் வாகனங்கள் வருகிறதா? என தேடி பார்த்தது. ஆனால் கரும்பு ஏற்றிக்கொண்டு எந்த வாகனங்களும் வரவில்லை.
இந்த நிலையில் அந்த வழியாக காரில் சென்றவர்கள் தின்பண்டங்களை சாப்பிட்டு விட்டு அதன் பிளாஸ்டிக் பைகளை வெளியே வீசிவிட்டு சென்றார்கள். சாப்பிட கரும்பு கிடைக்காததால் யானை ஏமாற்றமடைந்தது. தனது பசியை போக்க ரோட்டில் வீசப்பட்டு கிடந்த பிளாஸ்டிக் பைகளை துதிக்கையால் எடுத்து வாயில் போட்டு தின்றது. சிறிது நேரம் கழித்து அங்கிருந்து சென்றுவிட்டது. இதனை அந்த வழியாக வாகனங்களில் சென்ற சிலர் தங்கள் செல்போன்களில் புகைப்படம் எடுத்தனர்.
உயிருக்கு ஆபத்து
இதுபற்றி வன ஆர்வலர்கள் கூறும்போது, 'பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு குறித்து பொதுமக்களுக்கு ஆண்டுதோறும் பலமுறை பள்ளிக்கூட, கல்லூரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் திம்பம் மலைப்பாதையில் வீசப்பட்டு கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றியும் வருகின்றனர்.
எனினும் வனப்பகுதி வழியாக செல்பவர்கள் தொடர்ந்து இதுபோல் தின்பண்டங்களை தின்றுவிட்டு பிளாஸ்டிக் பொருட்களை ரோட்டில் வீசிவிட்டு செல்கிறார்கள். இதை சாப்பிடும் வனவிலங்குகளுக்கு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. உயிருக்கு கூட ஆபத்து ஏற்படலாம். எனவே வனப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை வீசிவிட்டு செல்பவர்களை வனத்துறையினர் கண்டறிந்து அவர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.