< Back
மாநில செய்திகள்
திருவாடானை அருகே பரபரப்பு: உல்லாசமாக இருக்க கணவனை கொன்ற மனைவி - கொலையில் திடுக்கிடும் தகவல்
மாநில செய்திகள்

திருவாடானை அருகே பரபரப்பு: உல்லாசமாக இருக்க கணவனை கொன்ற மனைவி - கொலையில் திடுக்கிடும் தகவல்

தினத்தந்தி
|
24 April 2024 8:45 PM IST

கணவனை கொன்ற 20-வது நாளில் கள்ளக்காதலனை உதறிய ஆர்த்தி பஸ் கண்டக்டர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

தொண்டி,

போலீசுக்கு புகாரே வராத டெய்லர் கொலையில் துப்புதுலங்கி அவருடைய மனைவி, கள்ளக்காதலன் உள்பட 3 பேர் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே செவ்வாப்பேட்டையை அடுத்த கொடுங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (வயது 42). டெய்லர். சென்டிரிங் வேலையும் பார்த்து வந்தார்.

இவர் தஞ்சாவூர் பகுதியில் சென்டிரிங் வேலைக்கு சென்ற போது ஆர்த்தி (35) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் 2 ஆண்டுக்கு முன்பு ஸ்ரீகாந்த் திடீரென மாயமானார். இதுகுறித்து, அப்போது போலீசில் புகார் ஏதும் செய்யப்படவில்லை.

இந்த நிலையில் திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு நிரேசுவுக்கு, மாயமான ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு இருப்பதாக ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் இதுதொடர்பாக அவர் ரகசியமாக விசாரணை மேற்கொண்டு வந்தார். குறிப்பாக ஸ்ரீகாந்த் மனைவி ஆர்த்தியின் நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்து வந்தனர்.

ஸ்ரீகாந்தின் நண்பரான கொடுங்குளத்தை சேர்ந்த இளையராஜாவுக்கும் (35), ஆர்த்திக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளத்தொடர்பு இருந்து வந்தது பற்றி போலீசாருக்கு தெரியவந்தது. எனவே அவரையும் கண்காணித்தனர்.

ஒருகட்டத்தில் ஆர்த்தியை வரவழைத்து போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். ஆனால் கிடுக்கிப்பிடி கேள்விகளால் சிக்கிய அவர், தன்னுடைய கணவரை கொல்ல கள்ளக்காதலன் உள்ளிட்ட சிலரை ஏவிவிட்ட அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளார். உடனே போலீசார் உஷாராகி, இளையராஜாவை மடக்கிப்பிடித்தனர்.

அதன்பின்னரே ஸ்ரீகாந்த் கொன்று புதைக்கப்பட்ட விவரம் அம்பலமானது. இந்த சம்பவத்தை எவ்வாறு செய்தனர் என்பது பற்றி அவர்கள் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-

கணவரை பார்க்க வீட்டுக்கு வந்து சென்ற இளையராஜாவுடன் ஆர்த்தி பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதல் ஆனது. இது கணவர் ஸ்ரீகாந்துக்கு தெரியவந்ததால் மனைவியை அவர் கண்டித்துள்ளார். தன் வீட்டுக்கு இனி வரக்கூடாது என இளையராஜாவிடமும் தெரிவித்துள்ளார். ஆனாலும் கள்ளக்காதலை கைவிடாத இருவரும், ஸ்ரீகாந்தை தீர்த்துக்கட்ட திட்டமிட்டனர்.

தங்கள் திட்டத்தை நிறைவேற்ற ஆர்த்தியே உறுதுணையாக இருப்பதை அறிந்த இளையராஜா, தனது நண்பர்களான சிவகங்கை மாவட்டம் முப்பையூர் அருகே உள்ள மேக்காரைக்குடியை சேர்ந்த அஜித் (35), சிவகங்கையைச் சேர்ந்த ஆசை மற்றும் சமயத்துரை ஆகியோரிடம் தெரிவித்து உள்ளார்.

சம்பவத்தன்று மாடு வியாபாரம் எனக்கூறி ஸ்ரீகாந்தை தேவகோட்டை அருகே உள்ள இலக்கினி வயல் கிராமத்திற்கு காரில் இளையராஜாவின் கூட்டாளிகள் நைசாகப் பேசி அழைத்துச் சென்றனர்.

அங்குள்ள சித்தானூர் கண்மாய் பகுதியில் அமர்ந்து அனைவரும் ஒன்றாக மது குடித்துள்ளனர். மதுபோதையில் இருந்த போது திட்டமிட்டபடி இளையராஜாவும் அங்கு வந்து, ஸ்ரீகாந்த்தை கூட்டாக அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். பின்னர், கண்மாயில் ஓரிடத்தில் குழிதோண்டி ஸ்ரீகாந்த் உடலை புதைத்ததாக வாக்குமூலம் அளித்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆர்த்தி, இளையராஜா, அஜித் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீகாந்த் உடல் புதைக்கப்பட்ட இடம் அடையாளம் காட்டப்பட்டதை தொடர்ந்து, திருவாடானை துணை சூப்பிரண்டு நிரேஷ், திருவாடானை இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார், அந்த கண்மாய் பகுதியில் தோண்ட நடவடிக்கை மேற்கொண்டனர்.

தேவகோட்டை தாசில்தார் அசோக்குமார், தேவகோட்டை துணை சூப்பிரண்டு பார்த்திபன் உள்ளிட்டோர் முன்னிலையில் தோண்டப்பட்டது.

ஸ்ரீகாந்தின் எலும்புகள் மீட்கப்பட்டன. சம்பவத்தன்று அவர் வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட் அணிந்திருந்தார். அந்த குழியில் இருந்து அவற்றையும் கைப்பற்றினர். ராமநாதபுரம் மருத்துவ குழுவினர் அங்கேயே வந்து ஆய்வு செய்து, எலும்புகளை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஸ்ரீகாந்தை கொன்றது எப்படி? என்பதை கைதானவர்கள் நடித்து காட்டினர்.

இச்சம்பவத்தில் தலைமறைவாக இருக்கும் ஆசை மற்றும் சமயத்துரை ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். போலீசுக்கு புகாரே வராத வகையில் நடந்த கொலையில் 2 ஆண்டுக்குப்பின் துப்பு துலங்கி, பெண், கள்ளக்காதலன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கணவனை கொன்ற 20-வது நாளில் கள்ளக்காதலனை உதறிய ஆர்த்தி

திருவாடானை அருகே கள்ளக்காதலனை ஏவி தனது காதல் கணவர் ஸ்ரீகாந்தை ஆர்த்தி கொலை செய்தார். உல்லாசமாக இருக்க தனது கள்ளக்காதலன் இளையராகாவை விட்டு பிரிந்தார். பின்னர் ஆர்த்தி தனது 2 குழந்தைகளுடன் ஊரில் இருந்து சென்று விட்டார். அரசு பஸ் கண்டக்டர் ஒருவருடன் ஆர்த்திக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆர்த்தி தனது குழந்தைகளுடன் அந்த கண்டக்டருடன் திருச்சியில் குடும்பம் நடத்தி வந்தார். ஆனால் தங்கள் மகன் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியாமல் உண்மையிலேயே ஆர்த்தி, தன் மகனுடன் தான் வசித்து வருவதாக ஸ்ரீகாந்தின் பெற்றோர் அப்பாவித்தனமாக நினைத்து இருந்ததால் 2 ஆண்டுகளாக மகன் மாயம் குறித்து போலீசில் புகார் அளிக்காமல் இருந்துள்ளனர். இந்தநிலையில் அரசல், புரசலாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் இளையராஜாவும், ஆர்த்தியும் சிக்கியுள்ளனர்.

மேலும் செய்திகள்