< Back
மாநில செய்திகள்
ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்-பா.ஜனதா விவசாய அணி மாநில தலைவர் வலியுறுத்தல்
அரியலூர்
மாநில செய்திகள்

ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்-பா.ஜனதா விவசாய அணி மாநில தலைவர் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
14 Sept 2022 12:02 AM IST

ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பா.ஜனதா விவசாய அணி மாநில தலைவர் வலியுறுத்தினார்.

பா.ஜனதா விவசாய அணி சார்பில் திருச்சி கோட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டம் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது. இதில் 5 மாவட்டங்களை சேர்ந்த விவசாய அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பிறகு பா.ஜனதா விவசாய அணி மாநில தலைவர் நாகராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜெயங்கொண்டம் அனல் மின் திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். மேலும், ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டம் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

அத்திக்கடவு, காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம், கால்நடை பூங்கா உள்ளிட்ட அ.தி.மு.க. அரசு கொண்டுவந்த எந்த திட்டங்களையும் தி.மு.க. அரசு செயல்படுத்தவில்லை. அரியலூர் மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கரில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில் முந்திரி தொழிற்சாலை அமைக்க மத்திய அரசு திட்டம் தீட்டியுள்ளது. எனவே விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு இந்த தொழிற்சாலையை கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் தமிழக விவசாயிகள் சரிவர பதிவு செய்யாததால் அவர்களுக்கு மத்திய அரசின் நிதியுதவி கிடைக்காது. எனவே மாநில அரசு இதுகுறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி இந்த திட்டத்தில் சேர்க்க வேண்டும். இல்லையென்றால் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.

மின் துறையை சீரமைக்காவிட்டால் எதிர்காலத்தில் மிகப்பெரிய பின்னடைவை தமிழக அரசு மின் துறை மூலமாக சந்திக்க நேரிடும். எனவே மத்திய அரசின் அறிவுரையை ஏற்று மின்துறையை சீரமைக்க வேண்டுமே தவிர மின்சார கட்டணத்தை இந்த அளவுக்கு உயர்த்துவது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. இது மக்களை ஏமாற்றும் செயல். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்