< Back
மாநில செய்திகள்
சாய்ந்து விழ காத்திருக்கும் வலுவிழந்த மரம்
நீலகிரி
மாநில செய்திகள்

சாய்ந்து விழ காத்திருக்கும் வலுவிழந்த மரம்

தினத்தந்தி
|
16 July 2023 2:30 AM IST

மண்வயல்- போஸ்பாரா சாலையில் வலுவிழந்த மரம், சாய்ந்து விழ காத்திருக்கிறது. இதை வெட்டி அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கூடலூர்

மண்வயல்- போஸ்பாரா சாலையில் வலுவிழந்த மரம், சாய்ந்து விழ காத்திருக்கிறது. இதை வெட்டி அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தென்மேற்கு பருவமழை

கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் 6 மாதங்கள் மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை மிதமாக பெய்து வருகிறது. இருப்பினும், பல இடங்களில் ராட்சத மரங்கள் சாய்ந்து விழுகிறது. இதனால் மின் கம்பங்கள் சேதம் அடைந்து வருகிறது. மேலும் மின்சார வினியோகமும் அடிக்கடி பாதிக்கப்படுகிறது.

இங்கு இன்னும் சில மாதங்கள் மழை பெய்ய உள்ளது. அதில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் நெடுஞ்சாலை துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாகன போக்குவரத்து

இந்த நிலையில் கூடலூர் அருகே ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட மண் வயலில் இருந்து போஸ்பாரா பகுதிக்கு தார் சாலை செல்கிறது.

இதன் சுற்று வட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மண் வயல் பஜாருக்கு அந்த சாலை வழியாக வந்து செல்கின்றனர். இதனால் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள சாலையாக விளங்குகிறது.

ஆபத்தான மரம்

இதற்கிடையில் சாலையோரம் மிகவும் பழமை வாய்ந்த ராட்சத மரம் ஒன்று ஆபத்தான நிலையில் நிற்கிறது. அதன் அடிப்பகுதி அரிக்கப்பட்டு வலுவிழந்து காணப்படுவதால், எந்த நேரத்திலும் சாய்ந்து விழும் அபாயமும் உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் மற்றும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் உள்ளனர்.

எனவே ஆபத்தான அந்த மரத்தை வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அசம்பாவிதங்கள் நிகழும் முன்பு அந்த மரம் வெட்டி அகற்றப்படுமா? என்று அவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்