< Back
மாநில செய்திகள்
கண்காணிப்பு கோபுரம் அமைப்பதை கைவிட வேண்டும்
நீலகிரி
மாநில செய்திகள்

கண்காணிப்பு கோபுரம் அமைப்பதை கைவிட வேண்டும்

தினத்தந்தி
|
5 Sept 2023 1:30 AM IST

ஓவேலி காந்திநகரில் உள்ள விளைநிலத்தில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் திட்டத்தை வனத்துறையினர் கைவிட வேண்டும் என விவசாயிகள் பாதுகாப்பு சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூடலூர்

ஓவேலி காந்திநகரில் உள்ள விளைநிலத்தில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் திட்டத்தை வனத்துறையினர் கைவிட வேண்டும் என விவசாயிகள் பாதுகாப்பு சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கைவிட வேண்டும்

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திநகரில் பொதுமக்கள், விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்க தலைவர் சுகுமாறன் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர்கள் பழனியாண்டி, நாகேந்திரன், ஆறுமுகம், சத்தியசீலன், ஆனந்தராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்

இதில் ஓவேலி பேரூராட்சி பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மக்கள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விளைநிலங்களில் வனத்துறை கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும். மக்களின் வாழ்விட பகுதிகள், விளை நிலங்களை மக்களிடம் கருத்து கேட்காமலும், முறையான முன்னறிவிப்பு செய்யாமலும் காப்பு காடுகளாக அறிவித்த வருவாய்த்துறையினரை இந்த கூட்டம் கண்டிக்கிறது.

மறுவரையறை செய்ய வேண்டும்

மக்கள் வாழும் பகுதிகள் வனப்பகுதியாக மாற்றப்பட்டு இருந்தால், அதுகுறித்த தகவல்களை எழுத்துப்பூர்வமாக வருவாய்த்துறையினர் பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஓவேலி பகுதியில் பெரும்பாலான மக்கள் பயன்பாட்டு நிலங்கள் வனப்பகுதியாக மாற்றப்பட்டு உள்ளதாக தெரிய வருகிறது. அவ்வாறு இருப்பின் வருவாய்த்துறையினர் அந்த நிலங்களை மறுவரையறை செய்து மக்கள் வாழும் பகுதியாக மாற்றி பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வருகிற 8-ந் தேதி கூடலூரில் வருவாய்த்துறையினர் ஏற்பாடு செய்து உள்ள அமைதி பேச்சுவார்த்தையில் சங்க நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் திரளாக கலந்துகொள்ள முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் பாஸ்கரன், கேதீஸ்வரன், சிவக்குமார், திருப்தி மணி, சுப்ரமணியம், முருகையா, ஆன்ட்ரூஸ் உள்ளிட்ட பலர் பேசினர். முன்னதாக சங்க செயலாளர் ரிச்சர்டு வரவேற்றார். முடிவில் சுப்ரமணியம் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்