< Back
மாநில செய்திகள்
அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும்
திருவாரூர்
மாநில செய்திகள்

அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும்

தினத்தந்தி
|
4 July 2023 12:15 AM IST

முத்துப்பேட்டையில் அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருத்துறைப்பூண்டி:

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி

முத்துப்பேட்டை புதிய பஸ் நிலையம் பின்புறம் ஆசாத்நகரில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஆசாத்நகர் மற்றும் சுற்று பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி கோரையாறு தடுப்பணையையொட்டி ஒதுக்குப்புறமாக அமைந்துள்ளது. பள்ளியின் முன்புறம் சுற்றுசுவர் இருந்தாலும், பள்ளி பின்புறம் சுற்றுச்சுவர் இல்லாததால் நீண்டகாலமாக திறந்த நிலையில் இருந்தது. இதை தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுச்சுவருக்கு பதில் முன்பு முள் வேலி அமைக்கப்பட்டது. ஆனாலும் போதிய பாதுகாப்பு இல்லாத வகையில் அமைந்துள்ளது. அதேபோல் பள்ளியின் பக்கவாட்டில் உள்ள சுற்றுச்சுவரும் சேதமாகி மண் அரிப்பு ஏற்பட்டு எந்தநேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.இதனால் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

சமூக விரோதிகள்

இந்த பள்ளி மக்கள் அதிகம் நடமாட்டம் இல்லாத பகுதியில் அமைந்துள்ளதால் இரவு நேரங்களில் சமூக விரோதிகள், உள்ளே புகுந்து பொருட்களை சேதப்படுத்துவது, உள்ளே அமர்ந்து மது அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல முறை திருட்டு சம்பவங்களும் நடந்துள்ளது.

பள்ளி பின்புறம் அமைந்துள்ள முள் வேலியால் போதிய பாதுக்காப்பு இல்லாமல் உள்ளது. இதன் மூலம் இரவு, பகல் பாராமல் தேவையற்றவர்கள் உள்ளே வரவும் வாய்ப்புகள் உள்ளது. அதேபோன்று பள்ளியை சுற்றிலும் கருவேல மரங்கள் வளர்ந்து காடுபோல் காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக பள்ளிக்குள் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வர வாய்ப்புகள் உள்ளது.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பள்ளியையொட்டி கோரையாறு செல்வதால் ஆற்றில் தண்ணீர் அதிகளவில் வரும்போது ஆற்றின் கரைகள் உடைந்து பள்ளிக்குள் வெள்ளநீர் புகும் அபாயம் உள்ளது.எனவே இங்கு படிக்கும் மாணவர்கள் நலன் கருதியும், பள்ளி பொருட்களை பாதுகாக்கும் வகையிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து பள்ளியின் பின்புறம் சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்