தேனி
விடிய, விடிய நடந்த காத்திருப்பு போராட்டம்
|சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் சார்பில், தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு விடிய, விடிய காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் சார்பில், தி.மு.க. தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை (சி.பி.எஸ்.) ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சி.பி.எஸ். திட்டத்தில் ஓய்வு பெற்ற, இறந்த, ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தினர், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர். இந்த போராட்டம் இரவிலும் தொடர்ந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கேயே இரவு படுத்து உறங்கினர். இதற்காக போர்வைகளை அவர்கள் கொண்டு வந்திருந்தனர். விடிய, விடிய நடந்த போராட்டம் நேற்று காலை 7.40 மணியளவில் முடிவுக்கு வந்தது. அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.