கடலூர்
"மதி எக்ஸ்பிரஸ்" என்ற பெயரில் வாகன அங்காடி
|மாற்றுத்திறனாளிகளுக்கு மதி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் வாகன அங்காடி பெற மாற்றுத்திறனாளிகள் வருகிற 25-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
கடலூர்
வாகன அங்காடி
தமிழகத்தில் கிராமப்புற மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம் மேம்பாட்டிற்கு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 முக்கிய பகுதிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய "மதி எக்ஸ்பிரஸ்" என்ற பெயரில் வாகன அங்காடி மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு கிடைப்பதுடன் மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வாதாரமும் உறுதி செய்யப்படுகிறது. "மதி எக்ஸ்பிரஸ்" வாகன அங்காடி மாற்றுத்திறனாளிகள் மூலம் இயக்கிட தகுதி வாய்ந்த மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
உறுப்பினராக இருக்க வேண்டும்
இதற்கான தகுதியாக, விண்ணப்பிக்கும் உறுப்பினர் மாற்றுத்திறனாளி சிறப்பு சுய உதவிக்குழு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் உறுப்பினராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் உறுப்பினராக உள்ள சுய உதவிக்குழு தேசிய ஊரக வாழ்வாதார இயக்க இணையத்தில் பதிவு பெற்றிருப்பது அவசியம்.பொருட்கள் உற்பத்தி, விற்பனையில் ஆர்வம் மற்றும் முன் அனுபவமுடையவராக இருக்க வேண்டும். சிறப்பு சுய உதவிக்குழு தொடங்கி ஓர் ஆண்டிற்கு மேல் தொடர்ந்து உறுப்பினராக இருக்க வேண்டும்.
முன்னுரிமை அடிப்படையில் மகளிர் மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்ட விதவை மகளிர் மாற்றுத்திறனாளிகள், ஆண் மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்படுவர். மேற்கண்ட முன்னுரிமை தகுதியில் விண்ணப்பங்கள் ஏதும் பெறப்படவில்லை எனில் பொது மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டுமே விற்பனை வாகன அங்காடி வழங்கப்படும்.
25-ந் தேதிக்குள்
விண்ணப்பிக்கும் உறுப்பினர் மீது எந்தவித புகார்களும் இல்லை என்பதையும் வங்கி மற்றும் சமுதாய அமைப்புகளில் வராக்கடன் ஏதுமில்லை எனவும் சான்றிதழ் வழங்க வேண்டும்.
ஒன்றுக்கு மேற்பட்ட தகுதி உடைய பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரும் பட்சத்தில் உரிய விதிமுறைகளை பின்பற்றி மாவட்ட அளவிலான குழுவின் மூலம் உரிய பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். இந்த தகுதிகளுக்குட்பட்ட சிறப்பு சுய உதவிக்குழு மாற்றுத்திறனாளி உறுப்பினரிடமிருந்து வருகிற 25-ந் தேதிக்குள் விண்ணப்பத்தை மாவட்டத்தில் உள்ள 14 வட்டார இயக்க மேலாண்மை அலுவலகம் மற்றும் கடலூர் மகளிர் திட்ட அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.