< Back
மாநில செய்திகள்
தகர மேற்கூரை விழுந்து காய்கறி வியாபாரி பலி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

தகர மேற்கூரை விழுந்து காய்கறி வியாபாரி பலி

தினத்தந்தி
|
23 Aug 2023 12:21 AM IST

பொன்னமராவதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் தகர மேற்கூரை விழுந்து காய்கறி வியாபாரி பலியானார்.

பலத்த காற்றுடன் மழை

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே அம்மன்குறிச்சி அருகே சொக்கநாதப்பட்டிைய சேர்ந்தவர் செல்வம் (வயது 48). இவரது மனைவி பாக்கியம்.

இவர்கள் பொன்னமராவதி சந்தையில் சனி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்கள் இருவரும் வழக்கம் போல் நேற்று சந்தையில் காய்கறி வியாபாரம் செய்தனர். அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் மின்கம்பங்களும் சாய்ந்தன.

வியாபாரி பலி

இதனால் கணவன்-மனைவி இருவரும் அருகில் உள்ள ஒரு மளிகைக்கடை ஓரமாக மழைக்கு ஒதுங்கி நின்று கொண்டிருந்தனர். அப்போது வீசிய காற்றில் எதிர்பாராதவிதமாக தகர மேற்கூரை பறந்து வந்து செல்வம் மீது விழுந்தது.

இதில் செல்வத்தின் வயிற்று பகுதியில் பலமாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே செல்வம் துடிதுடித்து இறந்தார்.

விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் வலையப்பட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்