திருவள்ளூர்
வெங்கல் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி மின்வாரிய ஊழியர் பலி
|வெங்கல் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் மின்வாரிய ஊழியர் பலியானார்.
மின்வாரிய ஊழியர்
வெங்கல் அருகே உள்ள ஆலத்தூர் கிராமம், அம்பேத்கார் தெருவில் வசித்து வந்தவர் அர்ஜுனன் (வயது 58). இவருக்கு ரமணி என்ற மனைவியும், பிரதீப் என்ற மகனும், ரேவதி என்ற மகளும் உள்ளனர். இவர் கீழானூர் துணை மின் நிலையத்தில் மின்பாதை ஆய்வாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் பணிக்குச் சென்ற இவர் டீ குடிப்பதற்காக அலுவலகத்தில் இருந்து மூலக்கரையில் உள்ள டீக்கடைக்கு சென்றார். டீயை குடித்து விட்டு பின்னர், திருவள்ளூர்-செங்குன்றம் நெடுஞ்சாலையில் கீழானூர் துணை மின் நிலையத்தில் உள்ள அலுவலகம் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அலுவலகம் அருகே வந்தபோது பின்னால் வந்த வேன் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
பலி
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அர்ஜுனன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக கூறினர். இந்த விபத்து குறித்து அர்ஜுனனின் மகன் பிரதீப் நேற்று வெங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்து குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், தலைமறைவான வேன் டிரைவரை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.