மயிலாடுதுறை
மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி மின்வாரிய ஊழியர் பலி
|குத்தாலத்தில் மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் மின்வாரிய ஊழியர் பலியானார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
குத்தாலம்:
குத்தாலத்தில் மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் மின்வாரிய ஊழியர் பலியானார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
மின்வாரிய ஊழியர்
திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கிய செல்வராஜ் (வயது 48). இவர் தற்போது மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கீழவெளிப்பகுதியில் மின்சார வாரியத்தில் அலுவலராக பணி புரிந்து வந்தார். இவருடைய மனைவி மற்றும் மகன்கள் மேட்டுப்பட்டியில் உள்ளனர். இவர் மட்டும் குத்தாலம் பகுதியில் தங்கியிருந்து பணி புரிந்து வந்தார்.
வேன் மோதி பலி
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பணி சம்பந்தமாக இவரும், குத்தாலத்தில் மின்வாரியத்தில் தற்காலிக பணியாளராக வேலை பார்க்கும் தென்நச்சினார்குடியைச் சேர்ந்த ராஜா மகன் அபி(25) என்பவரும் மோட்டார் சைக்கிளில் குத்தாலத்தில் இருந்து மயிலாடுதுறையை நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஆரோக்கிய செல்வராஜ் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றார்.
குத்தாலம் ஓ.என்.ஜி.சி. பிளான்ட் அருகே சென்ற போது எதிரே வந்த, வேன்(விபத்தில் சிக்கும் வாகனங்களை எடுத்து செல்வது) மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஆரோக்கிய செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் ஒருவர் படுகாயம்
இந்த விபத்தில் அபி படுகாயம் அடைந்தார். இவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தகவல் அறிந்த குத்தாலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உயிரிந்த ஆரோக்கிய செல்வராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.