கள்ளக்குறிச்சி
கச்சிராயப்பாளையத்தில் சிறுவன் மாயமான வழக்கில் திருப்பம்
|கச்சிராயப்பாளையத்தில் மாயமான சிறுவனை போலீசார் மீட்டனர். அவனை கடத்தி சென்று ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய உறவினர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்
கள்ளக்குறிச்சி
என்ஜினீயர்
கச்சிராயப்பாளையம் அருகே உள்ளது அக்கராயப்பாளையம் கிராமம். இந்த ஊரை சேர்ந்த என்ஜினீயரான லோகநாதன் என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கு கவுரி என்ற மனைவியும், பவேஷ்(வயது 6), தருண் ஆதித்யா(4) என்ற 2 மகன்களும் உள்ளனர். அதே பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் பவேஷ் 3-ம் வகுப்பும், தருண் ஆதித்யா யு.கே.ஜி.யும் படித்து வருகின்றனர்.
சிறுவன் மாயம்
இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்த லோகநாதன் கடந்த 7-ந் தேதி அவரது மனைவி, மகன்களுடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அதிகாலையில் எழுந்து பார்த்தபோது தருண் ஆதித்யாவை காணவில்லை. இதில் பதறிய லோகநாதனும், அவரது மனைவியும் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
இதனால் செய்வதறியாது திகைத்த அவர்கள் இது குறித்து கச்சிராயப்பாளையம் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சிறுவன் மாயம் என்று வழக்குப்பதிந்து விசாரணையை தொடங்கினர்.
ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்
இந்த நிலையில் கவுரியின் செல்போனுக்கு மர்மநபர் ஒருவர் போன் செய்து, உங்களது மகன் உயிருடன் வேண்டும் என்றால் ரூ.1 கோடி தர வேண்டும். நாங்கள் அவனை கடத்தியுள்ளோம் என்றும், இது பற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தால் அவனை கொன்றுவிடுவோம் என்றும் பேசிவிட்டு இணைப்பை துண்டித்தனர்.
இதில் பதறிய கவுரி செல்போன் அழைப்பு குறித்து போலீசிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கடத்தப்பட்ட சிறுவனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். மேலும் மர்ம நபரின் செல்போன் எண்ணை வைத்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த வேளையில் கவுரிக்கு நேற்று காலை மீண்டும் அந்த மர்மநபர் போன் செய்து பணம் கேட்டு மிரட்டினார்.
வாகன சோதனை
இதில் துரிதமாக செயல்பட்ட போலீசார், சின்னசேலம் அருகே பங்காரம் பகுதியில் மர்மநபர் இருப்பதை அறிந்தனா். இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் தலைமையிலான போலீசார் பங்காரம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக வந்த காரை மடக்கி சோதனை நடத்தினர். அதில் 2 மர்ம நபர்களும், கடத்தப்பட்ட சிறுவன் தருண் ஆதித்யாவும் இருந்தனர். உடனே சிறுவனை மீட்டு, 2 பேரையும் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
2 பேர் கைது
விசாரணையில், அவர்கள் கச்சிராயப்பாளையம் ஊத்தோடை பகுதியை சேர்ந்த லட்சுமி மகன் சுந்தரசோழன்(45), கச்சிராயப்பாளையம் டேனியல் மகன் ஈஸ்டர்ராஜ்(36) என்பதும், இதில் சுந்தரசோழகன் சிறுவனின் உறவினர் என்பதும் தெரியவந்தது.
மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் கல்வராயன்மலை பகுதி சுண்டகப்பாடி கிராமத்தை சேர்ந்த சகாதேவன் மகன் ரகுபதி, அருணாசலம் மகன் அருள் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சுந்தரசோழன், ஈஸ்டர்ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பாராட்டு
இதற்கிடையே கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் வந்து, இவ்வழக்கு விசாரணை குறித்து கேட்டறிந்தார். பின்னர் மீட்கப்பட்ட சிறுவன் தருண் ஆதித்யாவை, அவரது தாய் மற்றும் உறவினர்களிடம் அவர் ஒப்படைத்தார்.
பின்னர் இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் தனிப்படை போலீசாரை போலீ்ஸ் சூப்பிரண்டு செல்வகுமார் பாராட்டினார். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள ரகுபதி, அருள் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.