'கூல் லிப்' வழக்கில் திருப்பம்... நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
|மத்திய, மாநில அரசு பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
'கூல் லிப்' உள்ளிட்ட போதைப் பொருட்களை பாதுகாப்பற்ற உணவுப்பொருள் என அறிவிப்பது தொடர்பான விவகாரத்தில் அரியானா, கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த 3 நிறுவனங்களை நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்த்து, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது நீதிபதி பரத சக்கரவர்த்தி கூறுகையில், "புகையிலை பொருட்களுக்கு பள்ளி மாணவர்கள் அடிமையாகி இருப்பது தெரிய வருகிறது. தமிழ்நாட்டில் இவற்றிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், பிற மாநிலங்களில் அனுமதிக்கப்படுகிறது. அத்தகைய பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து ஜி.எஸ்.டி. வரி வசூலிக்கப்படுகிறது.
தற்போது பள்ளி மாணவர்கள் சண்டையிட்டுக் கொள்வது போன்ற சம்பவங்கள் அதிகரிக்க போதை பொருட்கள் பயன்பாடே காரணம். இளம் தலைமுறையின் சிந்திக்கும் திறன் முற்றிலுமாக மறைந்து வருகிறது. குழந்தைகளை நாம் எவ்வாறு பாதுகாக்கப் போகிறோம்? போதைப்பொருள் விற்பனை செய்தால் கைது செய்கிறோம். அவர்கள் ஜாமினில் வெளிவந்து விடுகின்றனர். 15 நாட்களுக்கு கடை மூடப்படுகிறது. பின்னர் வழக்கம் போல் செயல்பட தொடங்கி விடுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள எல்லா பள்ளிகளிலும்'கூல்-லிப்' எனும் போதைப்பொருட்களை பயன்படுத்துவோர் அதிகம் இருப்பதாகவே தெரிகிறது. ஆகவே அதனை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து, இந்தியா முழுவதும் ஏன் தடை செய்யக்கூடாது..? என்பது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை, பள்ளி கல்வி துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்" என்று அவர் கூறினார்.
தொடர்ந்து, இந்த வழக்கில் அரியானா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த 3 நிறுவனங்களையும் எதிர் மனுதாரர்களாக சேர்த்து உத்தரவிட்டார். மேலும் குட்கா, புகையிலை பொருட்களை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து, அதனை இந்தியா முழுவதும் ஏன் தடை செய்யக்கூடாது என்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு இந்த வழக்கை வரும் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.