திண்டுக்கல்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே நிலக்கரியுடன் நடுரோட்டில் கவிழ்ந்த லாரி
|திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே நிலக்கரியுடன் நடுரோட்டில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறை நோக்கி நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை சேலம் மாவட்டம் கருப்பூரை சேர்ந்த ஜெயராஜ் (வயது 42) ஓட்டினார். இவருடன், சேலம் மாங்குப்பம் பகுதியை சேர்ந்த கிளீனர் கோகுல் (22) லாரியில் இருந்தார். திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில் நேற்று முன்தினம் அதிகாலை லாரி வந்து கொண்டிருந்தது.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள மேம்பாலத்தில் லாரி வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி, தாறுமாறாக ஓடி சாலையோர தடுப்புச்சுவரில் மோதி நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த நிலக்கரி சாலை முழுவதும் கொட்டியது. விபத்து நடந்தவுடன் டிரைவர் ஜெயராஜ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். கோகுல் பலத்த காயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தாடிக்கொம்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் அனைத்து வாகனங்களும், கலெக்டர் அலுவலக அணுகு சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. மேலும் நிலக்கரி மற்றும் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். சுமார் 3 மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.