நீலகிரி
ரெயில் தண்டவாளத்தில் மரம் விழுந்தது
|குன்னூர்-ஊட்டி இடையே ரெயில் தண்டவாளத்தில் மரம் விழுந்தது.
குன்னூர்
நீலகிரி மாவட்டம் குன்னூர்-ஊட்டி இடையே தினமும் 3 முறை மலை ரெயில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. ரெயில் தண்டவாளத்தையொட்டி வனப்பகுதிகள் உள்ளதால் மரங்கள் அதிகமாக உள்ளன.
பருவமழை காலங்களில் மரங்கள் முறிந்து ரெயில் தண்டவாளத்தில் விழுந்து வருகின்றன. இதனால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டு வருகிறது. குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு தொடர் மழை பெய்தது. அதன் பின்னர் மழை பெய்யவில்லை. இந்தநிலையில் நேற்று குன்னூர் பகுதியில் பலத்த காற்று வீசியது. இதற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மரம் முறிந்து வெலிங்டன்-அருவங்காடு இடையே உள்ள ரெயில் தண்டவாளத்தில் விழுந்தது. குன்னூரில் இருந்து மதியம் 12 மணிக்கு ஊட்டிக்கு மலை ரெயில் புறப்பட்டது. பின்னர் மரம் விழுந்த தகவல் தெரிவிக்கப்பட்டு, ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அகற்றினர். அதன் பிறகு மலை ரெயில் புறப்பட்டு ஊட்டியை நோக்கி சென்றது. மரம் விழுந்ததால் ½ மணி நேரம் தாமதமாக சென்றது குறிப்பிடத்தக்கது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர்.