கடலூர்
அடுத்தடுத்து 2 முறை தீப்பிடித்து எரிந்த மரம்: பெண்ணாடம் அருகே பரபரப்பு
|அடுத்தடுத்து 2 முறை மரம் தீப்பிடித்து எரிந்ததால் பெண்ணாடம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.
பெண்ணாடம்,
பெண்ணாடம் அடுத்த வெண்கரும்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட நந்தபாடி பஸ் நிறுத்தம் அருகே விருத்தாசலம்-திட்டக்குடி நெடுஞ்சாலையில் புளியமரம் ஒன்று உள்ளது. இந்த மரம் நேற்று மதியம் 2 மணி அளவில் திடீரென தீப்பிடித்து எரிந்து கரும்புகை வெளி வந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் உடனே இதுகுறித்து விருத்தாசலம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீணை அணைத்தனர். பின்னர், இரவு 7 மணி அளவில் மீண்டும் அதே புளிய மரத்தில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதுபற்றி அறிந்த விருத்தாசலம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீண்டும் தீயை அணைத்தனர். இதுகுறித்து பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மரத்திற்கு மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அடு்த்தடுத்து 2 முறை ஒரே புளியமரம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.