திருவள்ளூர்
கனகம்மாசத்திரம் அருகே அனுமதி இன்றி கருங்கற்களை ஏற்றி வந்த டிராக்டர் சிக்கியது
|கனகம்மாசத்திரம் அருகே அனுமதி இன்றி கருங்கற்களை ஏற்றி வந்த டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கனகம்மாசத்திரம் பைபாஸ் சாலையில் மாவட்ட கனிம வளம் மற்றும் சுரங்கத்துறை இணை இயக்குனர் ஆனந்தராஜ் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆந்திர மாநில பதிவெண் கொண்ட டிராக்டரை கனிமவளத்துறை அதிகாரிகள் சோதனை செய்ய முயன்றனர். அப்போது டிரைவர் டிராக்டரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். டிராக்டரில் சோதனை செய்ததில், அரசு அனுமதி இன்றி ஆந்திராவில் இருந்து கருங்கற்கள் எடுத்து வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து கனிம வளம் மற்றும் சுரங்கத்துறை இணை இயக்குனர் ஆனந்தராஜ் புகாரின் பேரில் கனகம்மாசத்திரம் போலீசார் கருங்கற்கள் கடத்தி வந்த டிராக்டரை பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த கனகம்மாசத்திரம் போலீசார் தப்பி ஓடிய டிராக்டர் டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர். கடந்த மாதம் இதேபோல் ஆந்திர மாநிலத்தில் இருந்து எம்-சாண்ட் கடத்தி வந்த லாரியை கனிம வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.