தேனி
போடியில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழை: தடுப்பணையில் அருவி போல் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீர்
|போடியில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் தடுப்பணையில் அருவிபோல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்தது. இதனால் குளம், ஆறு, அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் மழை பெய்யவில்லை. குறிப்பாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு போடியில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. இரவு 8 மணிக்கு தொடங்கிய மழை 10 மணி வரை நீடித்தது.
பின்னர் நள்ளிரவு 1 மணி முதல் காலை 10 மணி வரை விடிய, விடிய கன மழை கொட்டி தீர்த்தது. சாலைகளில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். இந்த மழையால் போடி அருகே கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அந்த ஆற்றின் குறுக்கே உள்ள பிள்ளையார் தடுப்பணையில் அருவி போல தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதில் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் குளித்து மகிழ்கின்றனர். இதற்கிடையே நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் ஆற்றில் குளிக்க வேண்டாம் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.