திருச்சி
தனியார் வங்கி உதவி மேலாளர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
|தனியார் வங்கி உதவி மேலாளர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
வாடிக்கையாளர்களிடம் மோசடி
திருச்சி பொன்னகர் பகுதியில் பின்கேர் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் என்ற தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தவர் மோகன் என்ற மோகன்ராஜா (வயது 36). இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பழைய பால்பண்ணை பகுதியை சேர்ந்த முகமது அப்துல்லா (36) என்பவரிடம் வங்கியில் ஏலம் விடும் நகைகளை ஏலம் எடுத்து, அதனை விற்பனை செய்து அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி சுமார் ரூ.2 கோடியே 15 லட்சம் வரை பெற்றார். பின்னர் அதில் ரூ.92 லட்சத்து 92 ஆயிரத்தை மட்டும் திரும்ப கொடுத்துவிட்டு, மீதி சுமார் ரூ.1 கோடியே 22 லட்சம் வரை திரும்ப தராமல் ஏமாற்றியதாக முகமதுஅப்துல்லா கொடுத்த புகாரின்பேரில், மாநகர குற்றப்பிரிவு போலீசார் மோகன்ராஜா மீது வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் விசாரணையில் இவர், கடந்த ஜனவரி மாதம் முதல் தில்லைநகரை சேர்ந்த ராம்குமார் மற்றும் அவரது தம்பியை ஏமாற்றி ரூ.1 கோடியே 52 லட்சத்து 46 ஆயிரத்தை மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவர் என தெரியவந்தது.
குண்டர் சட்டத்தில்...
எனவே மோகன்ராஜா தொடர்ந்து வங்கி வாடிக்கையாளர்களிடம் மோசடியில் ஈடுபடுவதை தடுக்கும் பொருட்டு அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கொடுங்குற்ற விசாரணை பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் பரிந்துரை செய்தார். அதனடிப்படையில் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில், திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த மோகன்ராஜாவிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.