அரியலூர்
வடமாநிலத் தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் அச்சுறுத்தலா?
|வடமாநிலத் தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் அச்சுறுத்தலா? என்பது குறித்து அவர்களே கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டிற்கு வடமாநில தொழிலாளர்கள் வாழ்வாதாரம் தேடி சில ஆண்டுகளாக அதிக அளவில் வருகிறார்கள். வட மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் ஒரு நாள் கூலி அதிகமாக இருப்பதால் அவர்கள் அதிக அளவில் தமிழ்நாட்டை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
அவர்களின் வருகை குறித்து சில விமர்சனங்களும் இருக்கின்றன. அவர்களின் அதிக வரவால் தமிழர்களின் வேலை வாய்ப்பு குறைந்துவிட்டதாக அரசியல் அமைப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். இருந்தாலும் அவர்கள் இல்லை என்றால் கட்டிட வேலை, ஓட்டல் வேலை என்று எத்தனையோ வேலைகள் முடங்கிப் போகும் நிலைதான் இருக்கிறது என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை.
பீதி ஏற்படுத்திய வீடியோக்கள்
பீகார், உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஷ்கார், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் இருந்து தினந்தோறும் ரெயில்கள் மூலமாக தமிழ்நாட்டிற்கு சாரை சாரையாக வடமாநிலத்தவர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள். சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி, மதுரை உள்ளிட்ட பெருநகரங்கள் தொடங்கி சிறு நகரங்கள், கிராமங்கள் வரை வட மாநிலத்தவர்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது. இப்போது வரை பெருகிக்கொண்டே வருகிறது.
இந்தநிலையில் சமீபத்தில் சமூக வலைதளங்களில் இரு வீடியோக்கள் வெளியானது. பீகார் மாநில இளைஞர்கள் தாக்கப்படுவது போன்ற அந்த வீடியோக்கள் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தின. இது தமிழகத்தில் தங்கி பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் இடையே அச்சத்தையும் உண்டாக்கியது. இந்த வீடியோக்கள் போலியானவை என்றும், இதில் உண்மை கிடையாது என்றும் அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார். டி.ஜி.பி. சைலேந்திரபாபுவும் விளக்கம் அளித்துள்ளார்.
பீகார் உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் என்ன செய்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள்? என்பதை அவர்களே தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-
வாழவைக்குமே தவிர விரட்டாது
பெரம்பலூரில் பானிபூரி விற்பனை செய்யும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பி.சஞ்சய்:- நான் தமிழகத்தில் 15 ஆண்டுகளாக தொழில் செய்து வருகிறேன். தற்போது பெரம்பலூரில் பானிபூரி விற்பனை செய்து வருகிறேன். இங்கு தொழில் செய்யும் இடத்திலும், தங்கும் அறையிலும் எந்தவித பிரச்சினையும் இல்லை. சிலர் பானிபூரி சாப்பிட்டுவிட்டு, அதற்கான பணத்தை குறைவாக கொடுத்து செல்கிறார்கள். மற்றபடி தமிழக மக்கள் எங்களுடன் நன்றாக பழகி வருகிறார்கள். சிலர் எங்களை தமாஷ் செய்வார்கள். நானும் தமிழ் பேச கற்றுக்கொண்டேன். தற்போது வடமாநில தொழிலாளர்களை தமிழகத்தில் சிலர் தாக்குவது போல் வதந்தி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியதால் சென்னை உள்ளிட்ட இடங்களில் வேலை பார்க்கும் வடமாநில தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பயந்து, தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வதாக கேள்விப்பட்டேன். தமிழ்நாடு அரசு அந்த வீடியோவிற்கு விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு வந்தாரை வாழவைக்குமே தவிர விரட்டாது என்று நம்புகிறேன்.
நட்புடன் பழகுகின்றனர்
ஆலத்தூர் தாலுகாவில் உள்ள நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்யும் அசாம் மாநிலத்தை சேர்ந்த ராஜா உரான்ங்:- நான் கடந்த 5 ஆண்டுகளாக இங்கு தங்கி, தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறேன். பண்டிகை போன்ற காலங்களில் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்று வருவேன். என்னை போன்று வடமாநிலங்களை சேர்ந்த பலர் அந்த தொழிற்சாலையில் பணிபுரிகின்றனர். எங்களுக்கு தங்கும் விடுதி, உணவு உள்ளிட்ட வசதிகளை, அந்த ெதாழிற்சாலை நிர்வாகமே செய்து கொடுத்துள்ளது. இதனால் எங்களுக்கு எந்த பிரச்சினையும், அச்சுறுத்தலும், இடர்பாடுகளும் இல்லை. மேலும் இப்பகுதி மக்கள் எங்களுடன் அன்புடனும், நட்புடனும் பழகி வருகின்றனர். பணிபுரியும் இடத்தில் சக பணியாளர்களும் நட்புடன் பழகுகின்றனர். இதனால் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம்.
பாதிப்பு இல்லை
அரியலூரில் பானிபூரி வியாபாரம் செய்யும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த பானுபிரதாப்சிங்:- நான் கடந்த 1996-ம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு வந்தேன். இங்கு பானிபூரி வியாபாரம் செய்து வருகிறேன். எனது 2 குழந்தைகள் அரியலூர் நகரில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். என்னை போன்ற வடமாநில தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள மக்களால் பாதிப்பு எதுவும் இல்லை. ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவால் வடமாநில தொழிலாளர்கள் சிலருக்கு அச்சம் ஏற்பட்டது. மேலும் எனது சொந்த ஊரில் இருந்து எனக்கு போன் செய்து, இங்கு பிரச்சினை ஏதுமில்லையே என்று விசாரித்தனர். இதற்கிடையே எனது மைத்துனர் ஒருவர் இங்கு வந்து பானிபூரி விற்று வந்தார். பின்னர் சொந்த ஊருக்கு சென்ற அவர், தற்போது பயம் காரணமாக அரியலூருக்கு திரும்பவில்லை. இந்நிலையில் இங்கு வடமாநில தொழிலாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று தெரியவந்ததால் எனது உறவினர்கள் உள்ளிட்டோர் நிம்மதியடைந்துள்ளனர்.
தொந்தரவு செய்வதில்லை
பெரம்பலூர் பகுதியில் தொழிலாளியாக வேலை செய்து வரும் சமன்குமார்:- நான் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவன். பெரம்பலூருக்கு வந்து வேலை பார்த்து வருகிறேன். என்னை போல் ஏராளமானவர்கள் வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து வேலை செய்து வருகிறோம். எங்கள் பகுதிகளில் வழங்கப்படும் தினக்கூலியை விட இங்கு அதிகமாக வழங்கப்படுவதால், பலர் இங்கு வந்து வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக பலர் குடும்பத்துடன் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு வந்து தங்கியிருந்து வேலை பார்த்து வருகின்றனர். தங்கள் பிள்ளைகளை இங்குள்ள பள்ளிகளில் சேர்த்துள்ளனர். இங்குள்ள மக்கள், எங்களை போன்றவர்களிடம் வேற்றுமை பார்ப்பதில்லை. சிலர் எங்களை கேலி செய்தபோதும், அதை கண்டிப்பவர்களும் இருக்கின்றனர். வேலை பார்க்கும் இடத்திலும், தங்கும் இடத்திலும் யாரும் எந்தவொரு தொந்தரவும் செய்வதில்லை. வேலைக்கான சம்பளம் போதிய அளவு கிடைக்கிறது. சாப்பாடும் சரியாக கிடைக்கிறது. எல்லாவற்றையும் விட தமிழக மக்கள் அண்ணன், தம்பி போல் பாசத்துடன் பழகுகிறார்கள். இது எங்களுக்கு பிடித்திருக்கிறது. நானும் பேசும் அளவுக்கு தமிழ் கற்றுக்கொண்டேன்.
'மகிழ்ச்சியாகவே இருக்கிறோம்'
ஒட்டுமொத்தத்தில் சமூக வலைதளங்களில் வெளியான போலியான சில வீடியோக்களால் அதிர்ச்சிதான் ஏற்பட்டதே தவிர, தமிழக மக்களால் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை என்றும், தாங்கள் மகிழ்ச்சியாகவே இருக்கிறோம் என்றும் வடமாநிலத்தவர்கள் தெரிவித்துள்ளனர். அதுதான் உண்மையாகவும் இருக்கிறது.