< Back
மாநில செய்திகள்
வடமாநிலத் தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் அச்சுறுத்தலா?
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

வடமாநிலத் தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் அச்சுறுத்தலா?

தினத்தந்தி
|
5 March 2023 12:43 AM IST

தமிழ்நாட்டிற்கு வடமாநில தொழிலாளர்கள் வாழ்வாதாரம் தேடி சில ஆண்டுகளாக அதிகளவில் வருகிறார்கள்.

தமிழ்நாட்டை நோக்கி படையெடுப்பு

வட மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் ஒரு நாள் கூலி அதிகமாக இருப்பதால் அவர்கள் அதிகளவில் தமிழ்நாட்டை நோக்கி படையெடுத்து வருகின்றனர். அவர்களின் வருகை குறித்து சில விமர்சனங்களும் இருக்கின்றன. அவர்களின் அதிக வரவால் தமிழர்களின் வேலை வாய்ப்பு குறைந்துவிட்டதாக அரசியல் அமைப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இருந்தாலும் அவர்கள் இல்லை என்றால் கட்டிட வேலை, ஓட்டல் வேலை என்று எத்தனையோ வேலைகள் முடங்கிப்போகும் நிலைதான் இருக்கிறது என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை.

பீதி ஏற்படுத்திய வீடியோக்கள்

பீகார், உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஷ்கார், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் இருந்து தினந்தோறும் ரெயில்கள் மூலமாக சென்னைக்கு சாரை சாரையாக வடமாநிலத்தவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள். சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி, மதுரை உள்ளிட்ட பெருநகரங்கள் தொடங்கி சிறு நகரங்கள், கிராமங்கள் வரை வட மாநிலத்தவர்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது. இப்போது வரை பெருகி கொண்டே வருகிறது.

இந்தநிலையில் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் இரு வீடியோக்கள் வெளியானது. பீகார் மாநில இளைஞர்கள் தாக்கப்படுவது போன்ற அந்த வீடியோக்கள் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தின. இது தமிழகத்தில் தங்கி பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் இடையே அச்சத்தையும் உண்டாக்கியது.

இந்த வீடியோக்கள் போலியானவை என்றும், இதில் உண்மை கிடையாது என்றும் அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார். டி.ஜி.பி. சைலேந்திரபாபுவும் விளக்கம் அளித்துள்ளார்.

புதுக்கோட்டையில் தங்கி இருக்கும் வடமாநில தொழிலாளர்கள் என்ன செய்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள்? என்பதை அவர்களே தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

பாதுகாப்பான சூழல்

புதுக்கோட்டையில் பாணி பூரி வியாபாரம் செய்து வரும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஜித்து:- நான் இங்கு வந்து 7 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. குடும்பத்துடன் வசித்து வருகிறேன். இங்கு நல்ல முறையில் பாதுகாப்பான சூழலில் தான் உள்ளோம். என்னை போல் பலரும் வியாபாரம் செய்து வருகின்றனர். மக்கள் மத்தியில் பாணிபூரிக்கு வரவேற்பு உள்ளது. சில நாட்கள் வியாபாரம் நன்றாக இருக்கும். சில நாட்கள் வியாபாரம் இருக்காது. இருந்தாலும் மற்றொரு நாள் வியாபாரத்தில் அதனை சரி செய்துவிடுவோம். தொழிலுக்கும் எந்த பாதிப்பு இல்லை. எங்கள் மாநிலத்தில் இருந்து வந்த சிலரும் தொழிலாளர்களாக வேலைபார்த்து வருகின்றனர்.

சகோதரர்களை போல் பழகுகின்றனர்

உத்தரபிரதேசத்தை சேர்ந்த லவ்குமார்:- அன்னவாசலில் உள்ள ஒரு பேக்கரியில் பணிபுரிந்து வருகிறேன். இங்குள்ள தமிழர்கள் எங்களுடன் சகோதரர்களை போல் பழகுகின்றனர். எங்கேயோ ஏதோ வீடியோவை எடுத்து, இப்படியெல்லாம் குழப்பம் செய்கின்றனர். அதை பார்த்ததும் எங்களுக்கு முதலில் பயமாகத்தான் இருந்தது. பேக்கரி உரிமையாளர் எனக்கு தனியாக வீடு எடுத்துக்கொடுத்துள்ளார். நல்ல சம்பளம் தருகிறார். அவரது சகோதரிடம் எப்படி பழகுவாரோ அதேபோல் என்னிடமும் பழகுகிறார். நான் சந்தோசமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறேன்.

சொந்த வீடு

விராலிமலையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்க்கும் ஜெயந்த் மாலிக்:- நான் ஒடிசாவில் இருந்து விராலிமலைக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வந்து இங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறேன். ஆரம்ப காலத்தில் மொழி பிரச்சினை காரணமாக பொருட்கள் மற்றும் இங்குள்ள மக்களிடம் பழகுவதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால் அப்போது முதலே இப்பகுதி மக்கள் வேற்று மாநிலத்தவர் என்ற பாகுபாடின்றி பழகியதால் இங்கேயே தயக்கமின்றி தங்கி வேலை பார்த்து வருகிறேன். அதேபோல் ஊதியமும் எதிர்பார்ப்பதை போல் கிடைப்பதுவும் ஒரு காரணமாகும். இதனால் விராலிமலையை சுற்றியுள்ள பெரும்பாலான கம்பெனிகளில் அதிகளவில் வெளி மாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அதிலும் ஒரு சிலர் இங்கேயே சொந்தமாக வீடு கட்டி ரேஷன் கார்டு, ஆதார் கார்டு ஆகியவற்றை பெற்று நிரந்தரமாக வாழ்ந்து வருகின்றனர். தற்போது தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் வெளி மாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக வரும் செய்தியானது வருத்தத்தை ஏற்படுத்தினாலும் வதந்திகள் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுப்பதாக அரசு அறிவித்து இருப்பது எங்களுக்கு மன நிம்மதி அளிக்கிறது.

மகிழ்ச்சியாக இருக்கிறேன்

உத்தரபிரதேசத்தை சேர்ந்த கமல்குமார்:- அன்னவாசலில் உள்ள உணவகத்தில் வேலை செய்கிறேன். என்னுடன் வேலை செய்யும் சக தொழிலாளர்கள் அவர்களது குடும்பத்தில் உள்ளவர்களைப்போல் என்னிடம் பழகுகின்றனர். இந்தநிலையில், வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அது போலியானவை என தெரிந்து கொண்டோம். அந்த வீடியோவை பார்த்து எனது குடும்பத்தினர் பயத்துடனே விசாரித்தனர். நான் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாக இருப்பதாக கூறிய பிறகே அவர்கள் நிம்மதி அடைந்தனர்.

அச்சுறுத்தல் இல்லை

கறம்பக்குடியில் ஓட்டலில் வேலை பார்க்கும் ஜார்க்கண்ட்டை சேர்ந்த கைலாஷ்:- நான் கடந்த 2 ஆண்டுகளாக இங்கு வேலை பார்த்து வருகிறேன். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புதுக்கோட்டை, தஞ்சாவூர் பகுதிகளில் வேலை பார்க்கின்றனர். ஓட்டல், கட்டிடப்பணி உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருகிறோம். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கிறது. சம்பளத்தில் பாகுபாடு காட்டப்படுவது இல்லை. கூடுதல் உழைப்பை தருவதால் எங்களுக்கு நல்ல மரியாதை கிடைக்கிறது. இப்பகுதியில் எந்த அச்சுறுத்தலும் இல்லை. வழக்கமாக எங்கள் வேலைகளை செய்து வருகிறோம். உரிமையாளர், சக ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என அனைவரும் சகோதரர்கள் போல் பழகுகின்றனர். பாதுகாப்புடன் இருப்பதாகவே உணர்கிறோம். வீண் வதந்தி பரப்பப்படுவதாகவே தெரிகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

'மகிழ்ச்சியாகவே இருக்கிறோம்'

ஒட்டுமொத்தத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியான போலியான சில வீடியோக்களால் அதிர்ச்சிதான் ஏற்பட்டதே தவிர, தமிழக மக்களால் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை என்றும், தாங்கள் மகிழ்ச்சியாகவே இருக்கிறோம் என்றும் வடமாநிலத்தவர்கள் தெரிவித்துள்ளனர். அதுதான் உண்மையாகவும் இருக்கிறது.

மேலும் செய்திகள்