தஞ்சாவூர்
பஸ் சக்கரத்தில் சிக்கி ஜவுளிக்கடை ஊழியர் பலி
|பட்டுக்கோட்டையில் படிக்கட்டில் நின்று கொண்டு வந்த போது சரக்கு ஆட்டோவில் மோதி கீழே விழுந்த ஜவுளிக்கடை ஊழியர், பஸ் சக்கரத்தில் சிக்கி பலியானார்.
பட்டுக்கோட்டை:
ஜவுளிக்கடை ஊழியர்
பட்டுக்கோட்டை தாலுகா திருச்சிற்றம்பலம் மேலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகன் சிவானந்தம் (வயது 27). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவர் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று காலை சிவானந்தம் வழக்கம் போல் திருச்சிற்றம்பலத்தில் இருந்து தனியார் பஸ்சில் பட்டுக்கோட்டைக்கு வந்து கொண்டிருந்தார். கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர் பஸ்சின் முன்பக்க படிக்கட்டில் நின்று கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
பஸ் சக்கரத்தில் சிக்கி பலி
பட்டுக்கோட்டை அறந்தாங்கி சாலை முக்கத்தில் பஸ் வந்தபோது பஸ் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு வந்த சிவானந்தம் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ஆட்டோ மீது மோதி கீழே விழுந்தார். அப்போது அவர் வந்த பஸ்சின் பின் சக்கரம் ஏறி இறங்கியதால் படுகாயம் அடைந்த சிவானந்தம் சம்பவ இடத்திேலயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பட்டுக்கோட்டை நகர போலீசார் சிவானந்தம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.