< Back
மாநில செய்திகள்
ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ
திண்டுக்கல்
மாநில செய்திகள்

ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ

தினத்தந்தி
|
24 Aug 2023 5:30 AM IST

திண்டுக்கல்லில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அருகில் இருந்த 2 வீடுகளும் தீயில் எரிந்து நாசமாகின.

ரசாயன தொழிற்சாலை

திண்டுக்கல் அறிவுத்திருக்கோவில் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான். இவர் அதே பகுதியில் ரசாயன தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார். கட்டிடத்தின் தரைத்தளத்தில் தொழிற்சாலையும், மேல்தளத்தில் 3 வீடுகளும் உள்ளன. ரசாயன தொழிற்சாலையில் அதே பகுதியை சேர்ந்த அபுதாகிர், நாகலட்சுமி ஆகியோர் வேலை பார்க்கின்றனர்.

இந்தநிலையில் நேற்று மாலையில் ஊழியர்கள் 2 பேரும் சேர்ந்து தொழிற்சாலையில் உள்ள மின்மோட்டாரை இயக்கினர். அப்போது மின்கசிவு காரணமாக மோட்டாரில் தீப்பற்றியது. ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் தீ ரசாயனம் வைக்கப்பட்டிருந்த பேரல்கள் வரை பரவி மளமளவென எரிய தொடங்கியது.

அலறியடித்து ஓட்டம்

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் 2 பேரும் அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு மேல்தளத்தில் உள்ள 3 வீடுகளில் குடியிருந்த ஜெயசீலன், செல்வி, மணி ஆகியோர் வெளியே வந்து பார்த்தனர். அப்போது தொழிற்சாலையில் தீ கொளுந்துவிட்டு எரிவதை பார்த்தது பதற்றமடைந்த 3 பேரும் தங்கள் குடும்பத்தினருடன் வீடுகளை விட்டு உடனே வெளியேறினர்.

இதுகுறித்து திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் வெட்கட்ராமன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தொழிற்சாலையில் பற்றிய தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தொழிற்சாலைக்குள் பேரல்களில் வைக்கப்பட்டிருந்தது எளிதில் தீப்பற்றக்கூடிய ரசாயனம் என்பதால் அவர்களால் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

பேரல்கள் வெடித்தன

இதையடுத்து வேடசந்தூர் மற்றும் ஆத்தூர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. அந்த வாகனங்களில் இருந்தும் தொழிற்சாலைக்குள் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. இதற்கிடையே விபத்து குறித்து தகவலறிந்த செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி நிர்வாக அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்ட தனியார் தண்ணீர் வாகனங்களில் தண்ணீரை எடுத்து வந்து தீயணைப்பு படைவீரர்களிடம் கொடுத்தனர்.

அதனை பயன்படுத்தி தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் ரசாயனம் வைக்கப்பட்டிருந்த பேரல்கள் வெடித்து சிதறின. இதனால் தீ மேலும் கொளுந்துவிட்டு எரிந்தது. அப்போது தொழிற்சாலைக்கு பக்கத்தில் இருந்த 2 வீடுகளிலும் தீ பரவியது. இதனையடுத்து அந்த வீடுகளில் குடியிருந்த புகழேந்தி, கந்தவேல் ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்து உயிர் தப்பினர். தீ விபத்து காரணமாக அப்பகுதியில் பெரும் புகைமூட்டம் ஏற்பட்டது.

4 மணி நேர போராட்டம்

இதற்கிடையே தொழிற்சாலைக்குள் கோரத்தாண்டவமாடிய தீயை அணைக்க முடியாமல் தவித்த தீயணைப்பு படைவீரர்களின் கண்ணில் தொழிற்சாலைக்கு அருகில் கட்டிட பணிக்காக கொட்டி வைக்கப்பட்டிருந்த மணல் தென்பட்டது. உடனே அவற்றை வாளி, வாளியாக அள்ளிச்சென்று தொழிற்சாலைக்குள்ளும், அருகில் உள்ள வீடுகளுக்குள்ளும் வீசினர். சுமார் 4 மணி நேரம் மணலை அள்ளி வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் தொழிற்சாலை மற்றும் அதன் அருகில் இருந்த 2 வீடுகளில் பற்றிய தீயை தீயணைப்பு படைவீரர்கள் போராடி அணைத்தனர்.

இந்த விபத்து காரணமாக புகழேந்தி, கந்தவேல் ஆகியோர் வசித்த வீடுகளில் இருந்த பொருட்கள் முழுமையாக எரிந்து நாசமாகின. இதேபோல் தொழிற்சாலை, மேல்தளத்தில் இருந்த 3 வீடுகளும் பலத்த சேதமடைந்தன. தொழிற்சாலையில் இருந்த எந்திரங்கள், ரசாயன பேரல்கள் ஆகியவை முழுமையாக எரிந்து நாசமாகின. இந்த விபத்து குறித்து தாடிக்கொம்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
மேலும் செய்திகள்