காஞ்சிபுரம்
படப்பை அருகே பழைய பிளாஸ்டிக் பொருட்கள் குடோனில் பயங்கர தீ விபத்து
|படப்பை அருகே பழைய பிளாஸ்டிக் பொருட்கள் சேமிக்கும் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள வரதராஜபுரம் பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் தனியாருக்கு சொந்தமான பழைய பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் சேமிக்கும் குடோன் உள்ளது. இந்த குடோனில் இருந்து நேற்று மதியம் 2 மணியளவில் கரும்புகை வந்தது. குடோனில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் மளமளவென எரியத் தொடங்கியது.
அப்போது பிளாஸ்டிக் குடோனில் இருந்த ஊழியர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடினர். இதை பார்த்த பொதுமக்கள் தாம்பரம், மேடவாக்கம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதேபோல் சோமங்கலம், மணிமங்கலம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் குடோனில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது.
இந்த தீ விபத்தால் 2 கிலோமீட்டர் சுற்றளவு பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் வரதராஜபுரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
தீ விபத்து ஏற்பட்ட உடனே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தீவிபத்து குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.