காஞ்சிபுரம்
ஒரகடம் அருகே தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
|ஒரகடம் அருகே தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு பகுதியில் கார் உள்ளிட்ட பல்வேறு எந்திரங்களுக்கு பயன்படுத்தப்படும் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென தொழிற்சாலையின் ஒரு பகுதியில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென தொழிற்சாலை முழுவதும் பரவியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடினர் மேலும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு வீரா்கள் மற்றும் ஒரகடம் தொழிற்பேட்டை அருகே உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தொழிற்சாலையில் எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஒரகடம் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து தீ விபத்து குறித்து விசாரணையை தொடங்கினார். தொழிற்சாலை பகுதியில் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டே இருந்தது. தீயணைப்பு
வீரா்கள் சுமார் 1½ மணி நேரத்திற்கும் மேலாக போராடி தொழிற்சாலையில் எரிந்த தீயை முற்றிலும் அணைத்தனர்.
இந்த தீ விபத்து தொழிற்சாலையில் எப்படி ஏற்பட்டது. தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் பாய்லர் வெடித்து தீ ஏற்பட்டதா?
தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. தீ விபத்து குறித்து ஒரகடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின்பு தீ விபத்துக்கான காரணம், சேதமடைந்த பொருட்கள் குறித்து தெரியவரும்.
தீ விபத்தால் ஒரகடம், வடக்குப்பட்டு சுற்றுவட்டார பகுதி முழுவதும் கரும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. தொழிற்சாலைகள் நிறைந்த இந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.