< Back
மாநில செய்திகள்
சென்னை பூக்கடையில் 4 குடோன்களில் பயங்கர தீ விபத்து - ரூ.5 கோடி பொருட்கள் நாசம்
சென்னை
மாநில செய்திகள்

சென்னை பூக்கடையில் 4 குடோன்களில் பயங்கர தீ விபத்து - ரூ.5 கோடி பொருட்கள் நாசம்

தினத்தந்தி
|
3 March 2023 2:29 PM IST

சென்னை பூக்கடையில் பொம்மை குடோன் உள்பட 4 குடோன்களில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

சென்னை பூக்கடை என்.எஸ்.சி. போஸ் சாலையில் கோவிந்தப்ப நாயக்கன் தெரு, குடோன் தெரு உள்ளிட்ட பகுதியில் மொத்த விற்பனை கடைகள், குடோன்கள் அதிகம் உள்ளது. சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறை வியாபாரிகள், பொதுமக்கள் இங்கு வந்து பொம்மை, எலக்ட்ரிக்கல் பொருட்கள் உள்ளிட்டவைகளை வாங்கி செல்வது வழக்கம்.

இங்குள்ள கோவிந்தப்பநாயக்கன் தெருவில் சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த ராஜேந்திரகுமார் என்பவருக்கு சொந்தமான 3 மாடி கட்டிடத்தில் தரை தளத்தில் கடையும், 2 மற்றும் 3-வது மாடிகளில் பொம்மைகள், ஜவுளி, எலக்ட்ரிக்கல் பொருட்கள் என 4 குடோன்கள் உள்ளன.

நேற்று அதிகாலை 1 மணியளவில் பொம்மை குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளளெவென ஜவுளி, எலக்ட்ரிக்கல் குடோன்களுக்கும் பரவி 4 குடோன்களும் தீப்பிடித்து எரிந்தது. இதனால் கரும்புகை மூட்டம் வெளியேறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக எஸ்பிளனேடு, ராயபுரம், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, வியாசர்பாடி, எழில்நகர் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 10 தீயணைப்பு வாகனங்களில் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விைரந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பொம்மைகள் உள்ளிட்ட எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்கள் என்பதால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் விடிய விடிய என சுமார் 7 மணி நேரம் போராடி காலை 8 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் கரும்புகை மூட்டம் வந்து கொண்டே இருந்தது.

இதனால் அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. தீயணைப்பு வாகனங்களில் தண்ணீர் தீர்ந்து போனதால் குடிநீர் லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு புகைமூட்டம் அணைக்கப்பட்டது. நேற்று மதியம் 12 மணியளவில் புகை மூட்டமும் முற்றிலுமாக அணைக்கப்பட்டது.

தீ விபத்தில் பொம்மை பொருட்கள் உள்பட 4 குடோன்களில் இருந்த பொருட்கள் அனைத்தும் முற்றிலும் எரிந்து நாசமானது. சேதமடைந்த பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.5 கோடி இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொம்மை குடோனில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதும், பின்னர் அருகில் உள்ள மற்ற 3 குடோன்களுக்கும் தீ பரவியதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தீ விபத்து காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் ேகாவிந்தப்பநாயக்கன் தெரு நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் செய்திகள்